Monday, December 27, 2010

எந்தையின் பார்வையில் சிங்கை...

இது வரை என் கிறுக்கல்களைப் பொறுத்த நல்லுள்ளங்கள் இதையும் பொறுப்பார்களாக...

                                          "மானுடத்தின் வசந்தமிகு நாடு"


அழகு! அழகு! அழகு! அழகோ அழகு அப்படி மிளிர்கிறது. ஆண்டவன் இந்த மண்ணுக்கு மட்டும்தான் இந்த அழகை ஒட்டு மொத்தத்தையும் வழ‌ங்கிவிட்டானோ என்றுதான் தோன்றுகிறது என‌க்கு.

ஏனென்றால் அழகு எத்தனையோ விதங்கள், அத்தனை விதங்களையும் இம்மண்ணில் மட்டுமே பார்ததுவிட்ட எனக்கு இப்படித்தான்  நினைக்கத் தோன்றுகிறது.

உலகத்தில் எங்கெல்லாமோ ஆண்டவன் எத்தனையோ அதிசயங்களையும் ஆச்சரியங்களையும் படைத்துதானிருக்கிறான்.எனக்கென்னவோ இந்த மண்ணிற்கு மட்டும்தான் இந்த வனப்புகளோ என்று எண்ணத் தோன்றிவிட்டது!

ஆமாம்,  இச்சிங்கபுரியை என்னுடைய அகவை அறுபத்து  ஆறில் என் மனையாளுடன் கண்ணுறும் பாக்கியம் பெற்றதற்கு  எங்களைப் பெற்றெடுத்து ஆளாக்கிய எங்க‌ள் பெற்றோருக்கும், நாங்கள் பெற்றெடுத்த பிள்ளைக‌ளுக்கும், நாங்கள் பெறாத நல்ல உள்ளங்களுக்கும் மற்றும்  நான் வணங்கும் தெய்வத்திற்கும்தான் நன்றி சொல்லவேண்டும்!

மானுடத்தின் மாண்புகளுக்கு ஒரு மதிப்பு இருக்கிறது என்றால் இம்மண்ணில் ஒரு சிற்றெறும்பின் சுறு சுறுப்பும், அதைப் போன்ற உண்மையான உழைப்பும், அந்த உழைப்பில் இருக்கும் உயர்வும், அந்த உயர்வில் கிடைக்கும் வாழ்வும், அந்த வாழ்வில் கிடைக்கப்பெறும் மகிழ்வும், அந்த மகிழ்ச்சியில் கிடைக்கும் ஆத்ம திருப்தியும் பெற்ற மக்களை கண்ணுற்றபோது எவ்வித கண்ணேறும் பட்டுவிடக்கூடாது இந்த நாட்டுக்கு என்றுதான் நினைக்கத்தோன்றுகிறது எனக்கு. இம்மண்ணை வளப்படுத்தியவர்களில், இம்மண்ணை  மாண்புற வைத்தவர்களில் நமது சொந்தமண்ணின் வழித்தோன்றல்களுக்கும் பங்கிருக்கிறது என்றால் அதுவும் நமக்கு ஒரு மிகப்பெரிய பெருமையே!

இச் சிறிய நாட்டில், சிறிய நாடா? ஆம் நாடுதான் சிறியது, நாட்டின் வளர்ச்சியோ அளவிடமுடியாதது!
கடல் சூழ்ந்த சிங்கார சோலைகள் நடுவே ஓர் சொர்க்கபுரி என்றாலும் தகும். இப்படியொரு சொர்க்கபுரியை உருவாக்க இந் நாட்டு மக்களின் ஒற்றுமையும், உழைப்பும், தியாகமும், நம் நாட்டவர்களின் விசுவாசமான உழைப்பும்,  திருக்கோவில்களும் இங்குள்ள வழிபாடுகள், ஒழுங்குமுறைகள், பிறசமய ஒற்றுமை, சகிப்புத்தன்மை ஆகியவற்றோடு  இந்த நாட்டின் வளர்ச்சிக்கு எல்லாம் வல்ல இறைவனின் பரிபூர்ண திருவருளுமே காரணமாயிருக்கும் என்றால் அது மிகையல்ல!

-ரா. வேங்கடம்
ஏர்வாடி, நெல்லை மாவட்டம்
தமிழ் நாடு, இந்தியா

Tuesday, August 17, 2010

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை!

அவள் அப்படி ஒன்றும் அழகில்லை
அவளுக்கு யாரும் இணையில்லை
அவள் அப்படி ஒன்றும் கலரில்லை
ஆனால் அது ஒரு குறையில்லை

சமீபத்தில் வெளிவந்த ஒரு பாடல் இது! கேட்டமாத்திரத்திலேயே என்னை மிகவும் கவர்ந்துவிட்டது.வழக்கமாக காதலியின் (இல்லாத) அழகை வர்ணிக்கும் பாடல்களிலிருந்து மிகவும் விலகி,  ஒரு காதலியின் யதார்த்த அழகை உள்ளதை உள்ளபடிப் பாடி உள்ளத்தைக் கொள்ளை கொண்டிருக்கிறார் கவிஞர் நா.முத்துக்குமார், இப்பாடலை எழுதியவர்.
இப்பாடலின் இசையை விஜய் ஆன்ட்டனியும், ஜி.வி பிரசாத்தும் இணைந்து உருவாக்கியுள்ளார்கள்.
பாடலைப் பாடியிருப்பவர்கள் வினீத் சீனிவாசன், ரஞ்சித் மற்றும் ஜானகி அய்யர். வினீத் சீனிவாசன் மலையாளத் திரையிசையில் பிரபலமானவர். இவர் பிரபல மலையாள நடிகர் சீனிவாசனின் மகனாவார்.

அவள் கூந்தல் அதிக நீளமில்லை
அந்தக் காட்டில் தொலைந்தேன் மீளவில்லை
அவள் கைவிரல் மோதிரம் தங்கமில்லை
கை பிடித்திடும் ஆசை குறையவில்லை

என்ன ஒரு வார்த்தைக் கோர்ப்பு! காதலியின் முரணான அழகமைப்பிலும், காதலனின் பிறளாத பிதற்றல், அவள் மீது அவன் கொண்ட பிரியத்தை சொல்லும் விதம் மிகவும் அருமை.

அவள் பட்டுப்புடவை என்றும் அணிந்ததில்லை
அவள் சுடிதார் போல எதுவும் சிறந்ததில்லை
அவள் திட்டும்போதும் வலிக்கவில்லை
அந்த அக்கறை போல ஏதுமில்லை

அவளது ஏழ்மையும் அவனுக்கு அழகாகவே தெரிகிறது. அவள் திட்டினாலும் அதிலுள்ள அக்கறை மட்டுமே அவனுக்குத் தெரிகிறது. அருமையான வரிகள். யதார்த்தத்தை ரசிக்கத்தெரிந்த கவி! ஆம், கவிதைக்குரிய‌ பொய்யோ, மிகைப்படுத்தப்பட்ட வர்ணனைகளோ எதுவும் இல்லாதப் பாடலின் மேலும் சில வரிகளைக் கவனியுங்கள்.

அவ‌ள் வாச‌ம் ரோஜா வாச‌மில்லை
அவள் கூந்தல் அதிக‌ நீளமில்லை
அந்தக் காட்டில் தொலைந்தேன் மீளவில்லை
அவள் கையில் மோதிரம் தங்கமில்லை
கை பிடித்திடும் ஆசை குறையவில்லை
அவ‌ள் சொந்த‌ம் அன்றி எதுவுமில்லை
எனக்கு எதுவுமில்லை...

கவிதைக்குப் பொய்யழகு என்பதை மாற்றி புது இலக்கணம் படைத்திருக்கிறார் கவிஞர் முத்துக்குமார்!



 

Friday, July 9, 2010

SAM என்ற சாம்பசிவம்!

ஒருவரின் பெயரைக் கேட்டவுடனேயே, அவர் ஆணா, பெண்ணா, எந்த நாடு, மதம், இனத்தைச் சேர்ந்தவர், இன்னும் எந்த மாநிலத்தவர், ஏன் எந்த மாவட்டத்துகாரர் என்பதைக்கூட அனுமானித்துவிடலாம்.

உதாரணத்திற்கு 'கோமதி' என்ற பெயரை எடுத்துக் கொண்டால், இவர் திருநெல்வேலி மாவட்டத்துக்காரராகத்தான் இருப்பார் என யூகித்துவிடலாம். காரணம் திருநெல்வேலி மாவட்டத்தில் இந்தப் பெயரை அதிகமாகக் காணமுடியும். நான் எல்லாப் பெயரையும் இப்படி யூகிக்க முடியும் என்று சொல்லவில்லை. கிறிஸ்த்துவ பெயர்களை வைத்து ஒருவரை யூகிக்க முடியாது. அவை எல்லா நாட்டிலும் காணப்படும் பெயர்கள். அதுபோலத்தான் இஸ்லாமிய பெயர்களும். நான் குறிப்பிடுவது இந்து பெயர்கள். அதுபோல சீனர், ஜப்பானியர், கொரியர், ரஷ்யர் ஆகியோர்களையும் பெயரை வைத்தே யூகித்துவிடலாம்.

ஆனால், தற்போதைய நவீன யுகத்தில் ஒருவரின் பெயரை வைத்து அவர் ஆணா பெண்ணா என்பதைக்கூட யூகிக்க முடியாதபடி சுருக்கி, எழிலாக (stylish) வைத்துக் கொள்கிறார்கள். உதாரணத்திற்கு சில பெயர்கள்:
சாரா, நாரா, டாமி,...

'நாரா' என்பவர் நாராயணனாகவும் இருக்கலாம், நாகராணியாகவும் இருக்கலாம். 'சாரா' என்பவர் சரஸ்வதியோ அல்லது சரவணனோ தெரியாது. தமிழரசனும், தமிழரசியும் 'டாமி' என்றே அறிமுகம் செய்துகொள்கிறார்கள்.
ராமசாமி 'ரேம்' என்றும் சாம்பசிவம் 'சாம்' எனவும் பெயரில் எந்த அடையாளமும் தெரியாதபடி மாற்றி வைத்துக் கொள்கிறார்கள். பெயரைச் சுருக்கி அழைப்பது என்பது ஒன்றும் ஏதோ புதிதாய் வந்த பழக்கம் அல்ல.
நம் முன்னோர் காலத்திலிருந்தே அந்த பழக்கம் வழக்கத்தில் இருந்து வருகிறது. ராமசாமியை 'ராமு' என்றும், கிருஷ்ணசாமியைக் 'கிட்டு' என்றும், சுப்பிரமணியை 'சுப்பு' அல்லது 'மணி' என்றும், செல்வராணியை 'செல்வம்' என்றும் அழைப்பதுண்டு. பெயரைச் சுருக்கினாலும் அதன் உருவை மாற்றாமல், பொருளை மாற்றாமல் அழகாகச் சுருக்கி அழைத்தனர். அதுவும் மற்றவர்கள்தான் செல்லமாக ஒருவரை அப்படி அழைப்பார்களே தவிர‌ யாரும் தாங்களே தங்கள் பெயரை மற்றவர்களுக்குச் சொல்லும்போது சுருக்கிச் சொல்வதில்லை.

ஆனால், இன்றோ சிலர் தங்கள் பெயரை முழுமையாக வெளியில் சொல்ல தயக்கம் காட்டுகிறார்கள்.  இது ஏன்? ஏன் இந்த  மாற்றுப் பெயர்க் கவசம்?

ச‌மீப‌த்தில், தொலைபேசியில் ஒரு பெண்ணிட‌ம் பேசுகையில் அவ‌ர் த‌ன்னை 'சில்வி' என்று அறிமுக‌ம் செய்துகொண்டார். அவ‌ரை நேரில் சந்திக்கும் வ‌ரை அவ‌ர் ஓர் இந்திய‌ப் பெண் என்ப‌து என‌க்குத்
தெரியாது. அப்போதும் அவ‌ர‌து பெய‌ர் சில்விதான் என்றே நினைத்திருந்தேன். ஆனால் அவ‌ர‌து பெய‌ரை ஒரு ப‌டிவ‌த்தில் நிர‌ப்ப‌வேண்டிய‌ ஒரு சந்த‌ர்ப்ப‌ம் வந்த‌போதுதான் அவருடைய உண்மையான பெயர் 'செல்வநாய‌கி' என்ப‌து தெரிந்த‌து. எனக்கு மிக‌வும் ஆச்ச‌ர்ய‌மாக‌ இருந்தது. ஏன் அவ‌ர் தன் அடையாளத்தை வேறோர் பெய‌ரில் மறைக்க வேண்டும்? அவர் தான் ஒரு இந்தியரென்பதை மறைக்க விரும்புகிறாரா அல்லது இந்தியப் பெயர்கள் அழகாக இல்லை என‌ நினைக்கிறாரா?  இல்லை, தன் பெயரை மற்ற இனத்தவர் சுலபமாக அழைக்க வசதியாக‌ சுருக்கியிருக்கிறாரா? அப்படி என்றால் பெயரில் இன அடையாளம் மாறாமல் 'செல்வி' என்றே வைத்திருக்கலாமே? என்ன காரணமோ தெரியவில்லை!

ஆனால், எனக்கு சற்று மன வேதனையளித்த விசயம் இது! நம் இனப் பெயர்களை நாமே குறைவாக நினைத்தால் மற்றவர்கள் எப்படி மதிப்பிடுவார்கள்? அதுமட்டுமல்ல, இவர்களே தங்கள் பெயர்களைக் குறித்து தாழ்வு மனப்பான்மை கொண்டிருந்தால் இவர்களது பிள்ளைகளுக்கு எம்மாதிரியான பெயர்களை வைப்பார்கள்? எதிர்காலத்தில் முழுப் பெயர்களே சில்வியாகவும்,டாமியாகவும் தான் இருக்குமோ தெரியவில்லை!

அது போகட்டும்! இரண்டே எழுத்துக்களைக் கொண்டவர்கள்கூட தங்கள் பெயரையும் எப்படியாவது சுருக்க வேண்டுமே என்று நினைத்து, மிகவும் சிரமப்பட்டு யோசித்து, சுருக்கிக் கொள்வதை நினைக்கும்போது சிரிப்பு தான் வருகிறது. அப்படி என்ன பெயர் என்று கேட்கிறீர்களா? வேறொன்றுமில்லை, 'பாமி' தான் அந்தப் பெயர்! முழுப்பெயர் என்னவென்று நீங்களே யூகியுங்கள்! அதுவும் இரண்டே எழுத்து தான்!

Saturday, July 3, 2010

பழைய இரும்புச் சாமான் ஈயம் பித்தளைக்கு...


தலைப்பைப் படித்ததும் பழைய நகைச்சுவைத் துணுக்குகள் நினைவுக்கு வருகின்றன‌ அல்லவா?  ஆனால் சிரிப்புக்குப் பின்னால் சிந்திக்கவேண்டிய  விசயம் இது என நான் நினைக்கிறேன்.
ஆம்! பழைய இரும்பு, தகரம், பிளாஸ்டிக், கண்ணாடி புட்டிகள், பழைய துணிகள், நைந்துபோன பட்டுப்புடவைகள், பழைய செய்திதாட்கள், நோட்டுப் புத்தகங்கள்,பாடப்புத்தகங்கள்....என எல்லாவிதமான மறுபயனீட்டுப் பொருள்களுக்கும் ஒரு மதிப்புண்டு, ஒரு விலையுண்டு நம் ஊரில்! பணமோ, பேரீச்சம்பழமோ, அல்லது மரவள்ளிக் கிழங்கோ ஏதோ ஒன்று நாம் பயன் படுத்திவிட்டு வீசியெறியும் அந்தப் பொருட்களுக்கு விலையாகத் தந்துவிட்டு அதை சேகரித்து எடுத்துச்  செல்வது இன்னும் நடைமுறையில் உள்ளது.இதற்காகவே மக்கள் ஒரு சிறிய பிளாஸ்டிக் மூடியைக் கூட குப்பையில் வீசி எறியாமல் பாதுகாத்து சேகரித்து வைத்திருந்து பழைய பொருள் வாங்கும் வியாபாரிக்காக் காத்திருப்பதுண்டு. (இங்கும் ப‌ழைய‌ பொருட்க‌ள் வாங்குப‌வ‌ர்கள் (காராங்குனி) வ‌ர‌த்தான் செய்கிறார்க‌ள்! இது ஹைடெக் ந‌க‌ர‌மாயிற்றே, அவர் பழைய‌ லேப்டாப்,மொபைல் போன் என்று ஹைடெக்காக‌த்தான் கேட்பார்!)
 
இது என்ன பெரிய பிரமாதம் என்று நினைக்கலாம். சாதாரணமாக நாம் சிரிக்கும் விசயம்தான். எனினும் இம்முறையில் எவ்வ‌ள‌வு எளிதாக‌ ம‌றுப‌ய‌னீட்டுப் பொருட்க‌ள் ம‌ற்ற‌க் க‌ழிவுக‌ளுட‌னோ, குப்பைக‌ளுட‌னோ க‌ல‌ந்துவிடாம‌ல் த‌விர்க்க‌ப்ப‌டுகிற‌து!

வளர்ந்த நாடுகளில் எல்லாம் இவ்விசயம் இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை.  இங்கும் தெருவுக்குத் தெரு மூன்று நிறங்களில் குப்பைத் தொட்டிகள், ப்ளாஸ்டிக் குப்பைக்கு ஒன்று, பேப்பருக்கொன்று, மற்ற குப்பைகளுக்கொன்று என தனித்தனியே வைக்கப்பட்டிருந்தாலும், எத்தனைபேர் இவற்றை முறையாக‌ப் பயன்படுத்தி வருகிறோம்? ஏதோ ஒரு சிலரே!  காரணம் இது நடைமுறைக்குச் சாத்தியமற்ற செயல் என்பதுதான்! விலையற்ற, மதிப்பற்ற பொருட்களை தரம் பிரித்து பையில் போட்டுக் கட்டி இந்தக் குப்பைத் தொட்டிகளைத் தேடிக் கொண்டு வந்து போடுவது என்பது கொஞ்சம் சிரமமான‌ காரியம் என்பதாலேயே மக்கள், நான் உட்பட எல்லாக் குப்பையும் நமக்கு ஒன்றுதான் என நினைத்து எல்லவற்றயும் ஒரே பையில் போட்டுக் கட்டி, 'சூட்டில்' எறிந்துவிடுகிறோம்!

ஆனால் அதற்குப்பின் நாம் போடும் குப்பைகள் என்னவாகிறது என்று நாம் ஒருபோதும் யோசிப்பதிலலை.  அது அரசாங்கத்தின் வேலை! அதற்குத்தான் பணம் கட்டுகிறோமே என்று அல‌ட்சிய‌மாக இருந்து விடுகிறோம். சரி! இப்ப என்ன செய்யச் சொல்றீங்கன்னுதானே கேட்கிறீங்க? நாம என்ன செய்ய முடியும்?
 
 நடைமுறையில் சாத்தியமாகும் நம்ம ஊர் முறை இங்கும் வந்தால்,  அதாவது மறுபயனீட்டுப் பொருள்களுக்கு, காலத்துக்கேற்ற‌மாதிரி,  ஏதாவ‌து ஒரு பொருள் விலையாகக் கிடைக்குமானால், மக்கள் மறு பயனீட்டுப் பொருள்களை பொதுக்குப்பையில் கலக்காமல் இருப்பார்கள். இதனால் அரசாங்கத்திற்கும் குப்பைகளை தரம் பிரிப்பதற்கு ஆகும் செலவும், சிரமமும் குறையுமே என்ற ஒரு ஆதங்கம்தான்!

Sunday, June 20, 2010

அன்புள்ள அப்பா...



பெண்ணாய் நான் பிறந்ததற்காகவே
என்னைக் கொண்டாடினாய்!
"பாவம் செய்தவற்கே
பெண்பிள்ளைகள் பிறக்குமாம்"
அறியாத வயதில் எதோவொரு
அறிவிலி சொன்னதைக் கேட்டு
அப்படியா என கேட்டதற்கு,
"இல்லை இல்லையம்மா
நான் ஏதோ கொஞ்சம்
புண்ணியம் செய்ததாலேயே
உன்னைப் பெற்றேன்" எனச் சொல்லி
என்னை ஆற்றினாய்!




பள்ளிப் பருவத்தில் விடலைப்
பிள்ளைகள் தொல்லை செய்ய‌
கண்கலங்கி நானும்
உன்னிடம் வந்த போது
என்னிடம் சொன்னது
இன்னமும் என் காதுகளில்!
"பெண்பிள்ளைக‌ளுக்குக் க‌ல்வி
பொழுது போக்குவ‌த‌ற்க‌ல்ல‌ அது
வீர‌த்தையும், விவேகத்தையும்
த‌ன் ந‌ம்பிக்கையையும்
துணிச்ச‌லையும் த‌ர‌வேண்டும் மாறாக‌
கைபிசைந்து நிற்ப‌தற்க‌ல்ல‌"
எனச் சொல்லி எனக்கு
தைரிய‌ம் போதித்தாய்!

அதிக‌ம் நீ ப‌டிக்க‌வில்லை
அத‌னாலோ என்ன‌வோ
அனுதின‌மும் ஓர்
குற‌ள் ப‌டிக்க‌ச் சொல்வாய்
குறள்போல் நல்ல‌திரைப் ப‌ட‌மும்
பார்க்க‌ச் சொல்வாய்!
க‌ட‌வுள் போற்ற‌ச் சொல்வாய்
க‌ட‌வுள் துதியும் க‌ற்றுத் த‌ந்தாய்!

அன்று நீ எழுதிய‌ உன்
ப‌டைப்பிற்கெல்லாம் என்பெய‌ரை
புனை பெய‌ராக்கி மகிழ்ந்தாய்!
இன்று நான் எழுதும்
இச்சிறு க‌விதையை உன்
இரு பாத‌ம் ச‌ம‌ர்ப்பிக்கின்றேன்!


பத்து மாதமே தாயின் சுமை‍‍‍ - ஆனால்
பெத்த சுமையைத் தன் வாழ்நாள் முழுதும் சுமக்கும்
மொத்த தந்தையர்க்கும் என்
பணிவான தந்தையர் தின வணக்கங்கள்!

Friday, June 4, 2010

தண்ணீர், தண்ணீர்!

ஒரு சிறிய இடைவெளிக்குப் (இந்தியப் பயணத்திற்குப்) பின் மீண்டும் சந்திக்கிறேன். அனைவ‌ரும் ந‌ல‌ம்தானே?

அப்ப‌ப்பா... கோடைவெயில் கொளுத்துகிற‌து ஊரில்!
தின‌மும் குறிப்பிட்ட‌ சில‌ ம‌ணி நேர‌ங்க‌ளுக்கு மின்த‌டை வேறு!
ப‌ல‌ இட‌ங்க‌ளில் த‌ண்ணீர் பிர‌ச்சினையும் அதிகமாகக் காணப்படுகிறது!

ந‌ம் தாய் தந்தையர் செய்த‌ புண்ணிய‌மோ என்ன‌வோ நாம் இவ‌ற்றிலிருந்து த‌ப்பி இங்கே சுக‌மாக‌ வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!

அங்கு இரவு நேரங்களில், பள்ளிப் பிள்ளைகள் வீட்டுப்பாடம் செய்வதற்கும், படிப்பதற்கும் படும் பாடு.... பாவமாக இருக்கிறது!

மின்விளக்கு இருக்கிறது, வெளிச்சமில்லை! ஃப்ரிட்ஜ் இருக்கிறது, குளிர் நீரில்லை!  இன்னும் சில இடங்களில் குடி நீரே இல்லை!

இங்கு ந‌ம் பிள்ளைக‌ளுக்கு த‌ண்ணீர்த் த‌ட்டுப்பாடு என்றால் என்னவென்று தெரியுமா?

மின்த‌டை ஏற்ப‌ட்டால் எப்ப‌டி இருக்கும் என்றும் தெரியாது!  'மின்தடை ஏற்பட்டால் எப்படியிருக்கும்' என்று கட்டுரை எழுதச் சொன்னால் கற்பனை செய்து ஜோராக‌ ‌ எழுதிவிடுவார்கள்! (பெரும்பாலும் திருடன் வந்த கதைதான்... கரன்ட் இல்லையென்றால் திருடன் வந்துவிடுவான் என்று தான் யோசிக்கத்தெரியும்!) ஆனால் நடைமுறையில் எப்படி இருக்கும் என்பதை அறியாதவர்கள்! ஆனால் இவ‌ற்றை வீணாக்காம‌ல் சிக்க‌னமாக‌ செல‌வு செய்ய‌வாவ‌து தெரியுமா? த‌ட்டுப்பாடில்லாம‌ல் கிடைப்பதினாலேயே இவ‌ற்றின் ம‌திப்பும் தெரியாது! ஒன்று இல்லாத‌போது தான் அத‌ன் அருமை தெரியும்!

ந‌ம் பிள்ளைக‌ளுக்கு த‌ண்ணீர், மின்சார‌ம் ஆகிய‌வ‌ற்றை சேமிப்பதின் முக்கிய‌த்துவ‌த்தையும், அவ‌ற்றை நாம் எப்ப‌டி பெறுகிறோம், அத‌ற்காக‌ எவ்வ‌ள‌வு ப‌ண‌ம் செல‌வு செய்கிறோம் என்ப‌தைப் ப‌ற்றியெல்லாம் சொல்லி அவ‌ர்க‌ளுக்கு புரிய‌ வைப்ப‌தோடு அவ‌ற்றை சிக்க‌ன‌மாக‌ ப‌ய‌ன்ப‌டுத்த‌வும் க‌ற்றுக்கொடுக்க‌ வேண்டும்!

அங்கே ஒரு முறை மின்சார‌த் தடையின்போது, இருட்டில் உதித்த‌து தான் இது!

Saturday, May 8, 2010

அம்மாவுக்கு...

அன்பிற்கோர் தினம்
அன்னையர் தினம்!
அப்பழுக்கற்ற அன்பே
அன்னையின் அன்பு!

அருகிலேயே இருந்தபோது
அறியவில்லை உன் அருமை!
கண்ணுக்கும் கருத்துக்கும்
எட்டாமல் போய்விட்ட அன்பு
எட்டி நானும் வந்தபின்னே
தொட்டு வருடுகிறதே என் நினைவை!

கண்தூங்கி எழும்போதும்
காண்பது நாங்கள் உன்முகமே
கையில் கலந்த காஃபியுடன்
காலையிலேயே தொடங்கிவிடும்
கண்தூங்கச் செல்கையிலும்
தொடர்ந்திருக்கும் உன்பணியும்!
எப்போது உறங்குவாயோ
எப்போது எழுவாயோ - நான்
அறியாத ரகசியம் இது!

அன்போடு நீ சமைத்து
அவ்வளவையும் பரிமாறிவிட்டு
உண்ண நீ உட்காரும்போது
உனக்கு எஞ்சியிருந்தவை
உன் பிள்ளைகள் உண்ட திருப்தியும்
கிண்ணம் ஒட்டி உறவாடும்
துளி குழம்பும் கூட்டுமே!
தன் மக்கள் வயிற்று நிறைவை
தன் மனதில் தான் நிறைத்து
மிச்சம் மட்டும் உண்டு
துச்சமென நினைப்பாய் உன் வயிற்றை!

அறியாமையால் நீ எதையும்
தெரியாமல் சொல்லிவிட்டால் - எல்லாம்
அறிந்தவர்கள் போல் நாங்கள்
எள்ளி நகையாடி யதையும்
பிள்ளைகள் தானே என நீயும்
கள்ளமில்லாமல் தான் சிரிப்பாய்! - உன்
வெள்ளைச் சிரிப்பில் உள்ளவலி
தெரியவில்லை அப்போது - எனக்கும்
புரிகிறது அம்மா இப்போது
நானும் ஓர் அம்மாவானதால்!

சினந்து நீயும் பார்த்ததில்லை
செல்லமாய்க் கூடத் திட்டியதில்லை
கடுஞ்சொல் ஒன்றும் சொன்னதில்லை
சிடு சிடுவெனப் பேசியதில்லை - ஆனால்
இவை அனைத்தையும் நாங்கள்
நிறைய உனக்குச் செய்துள்ளோம்
உருவம் சற்றே பெருத்தபின்னே
உள்ளம் சிறுத்த பிள்ளைகளாய்!
 
எத்தனையோ செய்தாய் நீயெனக்கு
என்ன செய்தேன் நானுனக்கு?
உன் ஊண் உறக்கம் பறித்து
உடல் வளர்த்த நான் - கைமாறாய்
ஒன்று செய்ய சித்தம் கொண்டேன்
ஆம் அன்னையே! - ‍உன்னையும்
என் மடிசுமக்க வேண்டும்
மறு பிறவி ஒன்றிருந்தால்!


என் அன்னையை நினைத்து எழுதியது தான் எனினும்
எல்லா அன்னையருக்கும் இது என் சமர்ப்பணம்!
வாழ்த்துச் சொல்ல வார்த்தையில்லை,  எனவே என்
வணக்கங்கள், ஒவ்வொரு அம்மாவுக்கும்!