அன்பிற்கோர் தினம்
அன்னையர் தினம்!
அப்பழுக்கற்ற அன்பே
அன்னையின் அன்பு!
அருகிலேயே இருந்தபோது
அறியவில்லை உன் அருமை!
கண்ணுக்கும் கருத்துக்கும்
எட்டாமல் போய்விட்ட அன்பு
எட்டி நானும் வந்தபின்னே
தொட்டு வருடுகிறதே என் நினைவை!
கண்தூங்கி எழும்போதும்
காண்பது நாங்கள் உன்முகமே
கையில் கலந்த காஃபியுடன்
காலையிலேயே தொடங்கிவிடும்
கண்தூங்கச் செல்கையிலும்
தொடர்ந்திருக்கும் உன்பணியும்!
எப்போது உறங்குவாயோ
எப்போது எழுவாயோ - நான்
அறியாத ரகசியம் இது!
அன்போடு நீ சமைத்து
அவ்வளவையும் பரிமாறிவிட்டு
உண்ண நீ உட்காரும்போது
உனக்கு எஞ்சியிருந்தவை
உன் பிள்ளைகள் உண்ட திருப்தியும்
கிண்ணம் ஒட்டி உறவாடும்
துளி குழம்பும் கூட்டுமே!
தன் மக்கள் வயிற்று நிறைவை
தன் மனதில் தான் நிறைத்து
மிச்சம் மட்டும் உண்டு
துச்சமென நினைப்பாய் உன் வயிற்றை!
அறியாமையால் நீ எதையும்
தெரியாமல் சொல்லிவிட்டால் - எல்லாம்
அறிந்தவர்கள் போல் நாங்கள்
எள்ளி நகையாடி யதையும்
பிள்ளைகள் தானே என நீயும்
கள்ளமில்லாமல் தான் சிரிப்பாய்! - உன்
வெள்ளைச் சிரிப்பில் உள்ளவலி
தெரியவில்லை அப்போது - எனக்கும்
புரிகிறது அம்மா இப்போது
நானும் ஓர் அம்மாவானதால்!
சினந்து நீயும் பார்த்ததில்லை
செல்லமாய்க் கூடத் திட்டியதில்லை
கடுஞ்சொல் ஒன்றும் சொன்னதில்லை
சிடு சிடுவெனப் பேசியதில்லை - ஆனால்
இவை அனைத்தையும் நாங்கள்
நிறைய உனக்குச் செய்துள்ளோம்
உருவம் சற்றே பெருத்தபின்னே
உள்ளம் சிறுத்த பிள்ளைகளாய்!
எத்தனையோ செய்தாய் நீயெனக்கு
என்ன செய்தேன் நானுனக்கு?
உன் ஊண் உறக்கம் பறித்து
உடல் வளர்த்த நான் - கைமாறாய்
ஒன்று செய்ய சித்தம் கொண்டேன்
ஆம் அன்னையே! - உன்னையும்
என் மடிசுமக்க வேண்டும்
மறு பிறவி ஒன்றிருந்தால்!
என் அன்னையை நினைத்து எழுதியது தான் எனினும்
எல்லா அன்னையருக்கும் இது என் சமர்ப்பணம்!
வாழ்த்துச் சொல்ல வார்த்தையில்லை, எனவே என்
வணக்கங்கள், ஒவ்வொரு அம்மாவுக்கும்!
7 comments:
Our HATS OFF -- to this wonderful dedication to all the mom's on this earth !.
Yes, UNCONDITIONAL AND ETERNAL LOVE -- and that is OUR MOM !!!
Thank you very much dear MOM!
Romba nalla kavithai. Enakku en amma gnabagam varuthu. True words and touching too. Happy Mother's day!
...... அது சரி, நீங்கள் ஒரு கவிதைத்தொகுப்பைப் புத்தகமாகப் போட்டால் என்ன?
புத்தகம் போடும் அளவுக்கு புத்தி இல்லை! இருந்தாலும் உங்கள் கருத்தைக் கருத்தில் கொள்வேன்!
நன்றி!
super kavithai, i love my mom...
Touching!!! நீங்க சொன்ன மாதிரி இதை எந்தப் பிள்ளையும் அவங்க அம்மாவுக்குச் சொல்லலாம்! ����������������
Post a Comment