Saturday, July 3, 2010
பழைய இரும்புச் சாமான் ஈயம் பித்தளைக்கு...
தலைப்பைப் படித்ததும் பழைய நகைச்சுவைத் துணுக்குகள் நினைவுக்கு வருகின்றன அல்லவா? ஆனால் சிரிப்புக்குப் பின்னால் சிந்திக்கவேண்டிய விசயம் இது என நான் நினைக்கிறேன்.
ஆம்! பழைய இரும்பு, தகரம், பிளாஸ்டிக், கண்ணாடி புட்டிகள், பழைய துணிகள், நைந்துபோன பட்டுப்புடவைகள், பழைய செய்திதாட்கள், நோட்டுப் புத்தகங்கள்,பாடப்புத்தகங்கள்....என எல்லாவிதமான மறுபயனீட்டுப் பொருள்களுக்கும் ஒரு மதிப்புண்டு, ஒரு விலையுண்டு நம் ஊரில்! பணமோ, பேரீச்சம்பழமோ, அல்லது மரவள்ளிக் கிழங்கோ ஏதோ ஒன்று நாம் பயன் படுத்திவிட்டு வீசியெறியும் அந்தப் பொருட்களுக்கு விலையாகத் தந்துவிட்டு அதை சேகரித்து எடுத்துச் செல்வது இன்னும் நடைமுறையில் உள்ளது.இதற்காகவே மக்கள் ஒரு சிறிய பிளாஸ்டிக் மூடியைக் கூட குப்பையில் வீசி எறியாமல் பாதுகாத்து சேகரித்து வைத்திருந்து பழைய பொருள் வாங்கும் வியாபாரிக்காக் காத்திருப்பதுண்டு. (இங்கும் பழைய பொருட்கள் வாங்குபவர்கள் (காராங்குனி) வரத்தான் செய்கிறார்கள்! இது ஹைடெக் நகரமாயிற்றே, அவர் பழைய லேப்டாப்,மொபைல் போன் என்று ஹைடெக்காகத்தான் கேட்பார்!)
இது என்ன பெரிய பிரமாதம் என்று நினைக்கலாம். சாதாரணமாக நாம் சிரிக்கும் விசயம்தான். எனினும் இம்முறையில் எவ்வளவு எளிதாக மறுபயனீட்டுப் பொருட்கள் மற்றக் கழிவுகளுடனோ, குப்பைகளுடனோ கலந்துவிடாமல் தவிர்க்கப்படுகிறது!
வளர்ந்த நாடுகளில் எல்லாம் இவ்விசயம் இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை. இங்கும் தெருவுக்குத் தெரு மூன்று நிறங்களில் குப்பைத் தொட்டிகள், ப்ளாஸ்டிக் குப்பைக்கு ஒன்று, பேப்பருக்கொன்று, மற்ற குப்பைகளுக்கொன்று என தனித்தனியே வைக்கப்பட்டிருந்தாலும், எத்தனைபேர் இவற்றை முறையாகப் பயன்படுத்தி வருகிறோம்? ஏதோ ஒரு சிலரே! காரணம் இது நடைமுறைக்குச் சாத்தியமற்ற செயல் என்பதுதான்! விலையற்ற, மதிப்பற்ற பொருட்களை தரம் பிரித்து பையில் போட்டுக் கட்டி இந்தக் குப்பைத் தொட்டிகளைத் தேடிக் கொண்டு வந்து போடுவது என்பது கொஞ்சம் சிரமமான காரியம் என்பதாலேயே மக்கள், நான் உட்பட எல்லாக் குப்பையும் நமக்கு ஒன்றுதான் என நினைத்து எல்லவற்றயும் ஒரே பையில் போட்டுக் கட்டி, 'சூட்டில்' எறிந்துவிடுகிறோம்!
ஆனால் அதற்குப்பின் நாம் போடும் குப்பைகள் என்னவாகிறது என்று நாம் ஒருபோதும் யோசிப்பதிலலை. அது அரசாங்கத்தின் வேலை! அதற்குத்தான் பணம் கட்டுகிறோமே என்று அலட்சியமாக இருந்து விடுகிறோம். சரி! இப்ப என்ன செய்யச் சொல்றீங்கன்னுதானே கேட்கிறீங்க? நாம என்ன செய்ய முடியும்?
நடைமுறையில் சாத்தியமாகும் நம்ம ஊர் முறை இங்கும் வந்தால், அதாவது மறுபயனீட்டுப் பொருள்களுக்கு, காலத்துக்கேற்றமாதிரி, ஏதாவது ஒரு பொருள் விலையாகக் கிடைக்குமானால், மக்கள் மறு பயனீட்டுப் பொருள்களை பொதுக்குப்பையில் கலக்காமல் இருப்பார்கள். இதனால் அரசாங்கத்திற்கும் குப்பைகளை தரம் பிரிப்பதற்கு ஆகும் செலவும், சிரமமும் குறையுமே என்ற ஒரு ஆதங்கம்தான்!
Subscribe to:
Post Comments (Atom)

2 comments:
nice heading....
சரிதான் மேம், ஊர்ல இப்போ அந்த ஆளுங்களே வரதில்லை! ஏன்னா அவங்களுக்கு 1ரூபாய்க்கு அரிசி கிடைக்கிது. ஓடி ஓடி உழைக்க அவசியமில்லை. அம்மா இப்பல்லாம் எல்லாக் குப்பையும் ஒண்ணாதான் போடறாங்க :)
Post a Comment