Sunday, June 20, 2010

அன்புள்ள அப்பா...



பெண்ணாய் நான் பிறந்ததற்காகவே
என்னைக் கொண்டாடினாய்!
"பாவம் செய்தவற்கே
பெண்பிள்ளைகள் பிறக்குமாம்"
அறியாத வயதில் எதோவொரு
அறிவிலி சொன்னதைக் கேட்டு
அப்படியா என கேட்டதற்கு,
"இல்லை இல்லையம்மா
நான் ஏதோ கொஞ்சம்
புண்ணியம் செய்ததாலேயே
உன்னைப் பெற்றேன்" எனச் சொல்லி
என்னை ஆற்றினாய்!




பள்ளிப் பருவத்தில் விடலைப்
பிள்ளைகள் தொல்லை செய்ய‌
கண்கலங்கி நானும்
உன்னிடம் வந்த போது
என்னிடம் சொன்னது
இன்னமும் என் காதுகளில்!
"பெண்பிள்ளைக‌ளுக்குக் க‌ல்வி
பொழுது போக்குவ‌த‌ற்க‌ல்ல‌ அது
வீர‌த்தையும், விவேகத்தையும்
த‌ன் ந‌ம்பிக்கையையும்
துணிச்ச‌லையும் த‌ர‌வேண்டும் மாறாக‌
கைபிசைந்து நிற்ப‌தற்க‌ல்ல‌"
எனச் சொல்லி எனக்கு
தைரிய‌ம் போதித்தாய்!

அதிக‌ம் நீ ப‌டிக்க‌வில்லை
அத‌னாலோ என்ன‌வோ
அனுதின‌மும் ஓர்
குற‌ள் ப‌டிக்க‌ச் சொல்வாய்
குறள்போல் நல்ல‌திரைப் ப‌ட‌மும்
பார்க்க‌ச் சொல்வாய்!
க‌ட‌வுள் போற்ற‌ச் சொல்வாய்
க‌ட‌வுள் துதியும் க‌ற்றுத் த‌ந்தாய்!

அன்று நீ எழுதிய‌ உன்
ப‌டைப்பிற்கெல்லாம் என்பெய‌ரை
புனை பெய‌ராக்கி மகிழ்ந்தாய்!
இன்று நான் எழுதும்
இச்சிறு க‌விதையை உன்
இரு பாத‌ம் ச‌ம‌ர்ப்பிக்கின்றேன்!


பத்து மாதமே தாயின் சுமை‍‍‍ - ஆனால்
பெத்த சுமையைத் தன் வாழ்நாள் முழுதும் சுமக்கும்
மொத்த தந்தையர்க்கும் என்
பணிவான தந்தையர் தின வணக்கங்கள்!

1 comment:

lakshmi said...

அந்த முதல் கவிதை சூப்பர்! அப்பாவோட எழுத்தெல்லாம் வச்சிருக்கிங்களா? இருந்தா போஸ்ட் செய்ங்க மேம்! மனசுக்குப் பிடிச்சவங்களைப் பத்தி எழுதும் போது எழுத்தே அழகாயிருது! :)