ஒருவரின் பெயரைக் கேட்டவுடனேயே, அவர் ஆணா, பெண்ணா, எந்த நாடு, மதம், இனத்தைச் சேர்ந்தவர், இன்னும் எந்த மாநிலத்தவர், ஏன் எந்த மாவட்டத்துகாரர் என்பதைக்கூட அனுமானித்துவிடலாம்.
உதாரணத்திற்கு 'கோமதி' என்ற பெயரை எடுத்துக் கொண்டால், இவர் திருநெல்வேலி மாவட்டத்துக்காரராகத்தான் இருப்பார் என யூகித்துவிடலாம். காரணம் திருநெல்வேலி மாவட்டத்தில் இந்தப் பெயரை அதிகமாகக் காணமுடியும். நான் எல்லாப் பெயரையும் இப்படி யூகிக்க முடியும் என்று சொல்லவில்லை. கிறிஸ்த்துவ பெயர்களை வைத்து ஒருவரை யூகிக்க முடியாது. அவை எல்லா நாட்டிலும் காணப்படும் பெயர்கள். அதுபோலத்தான் இஸ்லாமிய பெயர்களும். நான் குறிப்பிடுவது இந்து பெயர்கள். அதுபோல சீனர், ஜப்பானியர், கொரியர், ரஷ்யர் ஆகியோர்களையும் பெயரை வைத்தே யூகித்துவிடலாம்.
ஆனால், தற்போதைய நவீன யுகத்தில் ஒருவரின் பெயரை வைத்து அவர் ஆணா பெண்ணா என்பதைக்கூட யூகிக்க முடியாதபடி சுருக்கி, எழிலாக (stylish) வைத்துக் கொள்கிறார்கள். உதாரணத்திற்கு சில பெயர்கள்:
சாரா, நாரா, டாமி,...
'நாரா' என்பவர் நாராயணனாகவும் இருக்கலாம், நாகராணியாகவும் இருக்கலாம். 'சாரா' என்பவர் சரஸ்வதியோ அல்லது சரவணனோ தெரியாது. தமிழரசனும், தமிழரசியும் 'டாமி' என்றே அறிமுகம் செய்துகொள்கிறார்கள்.
ராமசாமி 'ரேம்' என்றும் சாம்பசிவம் 'சாம்' எனவும் பெயரில் எந்த அடையாளமும் தெரியாதபடி மாற்றி வைத்துக் கொள்கிறார்கள். பெயரைச் சுருக்கி அழைப்பது என்பது ஒன்றும் ஏதோ புதிதாய் வந்த பழக்கம் அல்ல.
நம் முன்னோர் காலத்திலிருந்தே அந்த பழக்கம் வழக்கத்தில் இருந்து வருகிறது. ராமசாமியை 'ராமு' என்றும், கிருஷ்ணசாமியைக் 'கிட்டு' என்றும், சுப்பிரமணியை 'சுப்பு' அல்லது 'மணி' என்றும், செல்வராணியை 'செல்வம்' என்றும் அழைப்பதுண்டு. பெயரைச் சுருக்கினாலும் அதன் உருவை மாற்றாமல், பொருளை மாற்றாமல் அழகாகச் சுருக்கி அழைத்தனர். அதுவும் மற்றவர்கள்தான் செல்லமாக ஒருவரை அப்படி அழைப்பார்களே தவிர யாரும் தாங்களே தங்கள் பெயரை மற்றவர்களுக்குச் சொல்லும்போது சுருக்கிச் சொல்வதில்லை.
ஆனால், இன்றோ சிலர் தங்கள் பெயரை முழுமையாக வெளியில் சொல்ல தயக்கம் காட்டுகிறார்கள். இது ஏன்? ஏன் இந்த மாற்றுப் பெயர்க் கவசம்?
சமீபத்தில், தொலைபேசியில் ஒரு பெண்ணிடம் பேசுகையில் அவர் தன்னை 'சில்வி' என்று அறிமுகம் செய்துகொண்டார். அவரை நேரில் சந்திக்கும் வரை அவர் ஓர் இந்தியப் பெண் என்பது எனக்குத்
தெரியாது. அப்போதும் அவரது பெயர் சில்விதான் என்றே நினைத்திருந்தேன். ஆனால் அவரது பெயரை ஒரு படிவத்தில் நிரப்பவேண்டிய ஒரு சந்தர்ப்பம் வந்தபோதுதான் அவருடைய உண்மையான பெயர் 'செல்வநாயகி' என்பது தெரிந்தது. எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. ஏன் அவர் தன் அடையாளத்தை வேறோர் பெயரில் மறைக்க வேண்டும்? அவர் தான் ஒரு இந்தியரென்பதை மறைக்க விரும்புகிறாரா அல்லது இந்தியப் பெயர்கள் அழகாக இல்லை என நினைக்கிறாரா? இல்லை, தன் பெயரை மற்ற இனத்தவர் சுலபமாக அழைக்க வசதியாக சுருக்கியிருக்கிறாரா? அப்படி என்றால் பெயரில் இன அடையாளம் மாறாமல் 'செல்வி' என்றே வைத்திருக்கலாமே? என்ன காரணமோ தெரியவில்லை!
ஆனால், எனக்கு சற்று மன வேதனையளித்த விசயம் இது! நம் இனப் பெயர்களை நாமே குறைவாக நினைத்தால் மற்றவர்கள் எப்படி மதிப்பிடுவார்கள்? அதுமட்டுமல்ல, இவர்களே தங்கள் பெயர்களைக் குறித்து தாழ்வு மனப்பான்மை கொண்டிருந்தால் இவர்களது பிள்ளைகளுக்கு எம்மாதிரியான பெயர்களை வைப்பார்கள்? எதிர்காலத்தில் முழுப் பெயர்களே சில்வியாகவும்,டாமியாகவும் தான் இருக்குமோ தெரியவில்லை!
அது போகட்டும்! இரண்டே எழுத்துக்களைக் கொண்டவர்கள்கூட தங்கள் பெயரையும் எப்படியாவது சுருக்க வேண்டுமே என்று நினைத்து, மிகவும் சிரமப்பட்டு யோசித்து, சுருக்கிக் கொள்வதை நினைக்கும்போது சிரிப்பு தான் வருகிறது. அப்படி என்ன பெயர் என்று கேட்கிறீர்களா? வேறொன்றுமில்லை, 'பாமி' தான் அந்தப் பெயர்! முழுப்பெயர் என்னவென்று நீங்களே யூகியுங்கள்! அதுவும் இரண்டே எழுத்து தான்!
1 comment:
ஹஹா! பாமாதான மேடம்! ரேடியோல பேசுவாங்களே?!
Post a Comment