ஒரு சிறிய இடைவெளிக்குப் (இந்தியப் பயணத்திற்குப்) பின் மீண்டும் சந்திக்கிறேன். அனைவரும் நலம்தானே?
அப்பப்பா... கோடைவெயில் கொளுத்துகிறது ஊரில்!
தினமும் குறிப்பிட்ட சில மணி நேரங்களுக்கு மின்தடை வேறு!
பல இடங்களில் தண்ணீர் பிரச்சினையும் அதிகமாகக் காணப்படுகிறது!
நம் தாய் தந்தையர் செய்த புண்ணியமோ என்னவோ நாம் இவற்றிலிருந்து தப்பி இங்கே சுகமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!
அங்கு இரவு நேரங்களில், பள்ளிப் பிள்ளைகள் வீட்டுப்பாடம் செய்வதற்கும், படிப்பதற்கும் படும் பாடு.... பாவமாக இருக்கிறது!
மின்விளக்கு இருக்கிறது, வெளிச்சமில்லை! ஃப்ரிட்ஜ் இருக்கிறது, குளிர் நீரில்லை! இன்னும் சில இடங்களில் குடி நீரே இல்லை!
இங்கு நம் பிள்ளைகளுக்கு தண்ணீர்த் தட்டுப்பாடு என்றால் என்னவென்று தெரியுமா?
மின்தடை ஏற்பட்டால் எப்படி இருக்கும் என்றும் தெரியாது! 'மின்தடை ஏற்பட்டால் எப்படியிருக்கும்' என்று கட்டுரை எழுதச் சொன்னால் கற்பனை செய்து ஜோராக எழுதிவிடுவார்கள்! (பெரும்பாலும் திருடன் வந்த கதைதான்... கரன்ட் இல்லையென்றால் திருடன் வந்துவிடுவான் என்று தான் யோசிக்கத்தெரியும்!) ஆனால் நடைமுறையில் எப்படி இருக்கும் என்பதை அறியாதவர்கள்! ஆனால் இவற்றை வீணாக்காமல் சிக்கனமாக செலவு செய்யவாவது தெரியுமா? தட்டுப்பாடில்லாமல் கிடைப்பதினாலேயே இவற்றின் மதிப்பும் தெரியாது! ஒன்று இல்லாதபோது தான் அதன் அருமை தெரியும்!
நம் பிள்ளைகளுக்கு தண்ணீர், மின்சாரம் ஆகியவற்றை சேமிப்பதின் முக்கியத்துவத்தையும், அவற்றை நாம் எப்படி பெறுகிறோம், அதற்காக எவ்வளவு பணம் செலவு செய்கிறோம் என்பதைப் பற்றியெல்லாம் சொல்லி அவர்களுக்கு புரிய வைப்பதோடு அவற்றை சிக்கனமாக பயன்படுத்தவும் கற்றுக்கொடுக்க வேண்டும்!
அங்கே ஒரு முறை மின்சாரத் தடையின்போது, இருட்டில் உதித்தது தான் இது!
1 comment:
நீங்க எதைப் பத்தி எழுதினாலும் நகைச்சுவை சேர்த்து எழுதறது ரொம்ப நல்லாருக்கு! ��
Post a Comment