சூர்ய சக்ராவின் 'வேலையிட ஊழியர் பாதுகாப்பு' பதிப்பின் பாதிப்பே பின் வருவன!
வேலையிடத்தில் ஊழியர்களது பாதுகாப்பிற்கென்று பல திட்டங்களை அரசாங்கம் வகுத்து செயல்படுத்திவருகிறது. அனைத்து நிறுவனங்களும் அவற்றை மிகவும் கண்டிப்பாகப் பின்பற்றி வருகின்றன.
வெளி நாடுகளிலிருந்து ஊழியர்கள் இங்கு வந்தவுடனேயே முதல் வேலையாக வேலையிட பாதுகாப்பு வகுப்பிற்குத்தான்( SAFETY ORIENTATION COURSE) அனுப்பப்படுகிறார்கள். பின்னர் தான் பணியில் சேர்வது எல்லாம்!
அங்கு அவர்களுக்கு, பணியிடத்தில் வேலை செய்யும்போது எம்மாதிரியான பாதுகாப்பு உடைகள், கவசங்கள்,பாதுகாப்பு வார்கள், ஆகியவற்றை எப்படி, எப்போது அணியவேண்டும், வேலை செய்யும்போது எம்மாதிரியான பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும் என்றெல்லாம் பயிற்சி அளிக்கப்படுகிறது. அந்தப் பயிற்சி வகுப்பில் பயிற்சி பெற்று தகுந்த சான்றிதழும் பெற்ற பிறகுதான் ஊழியர்கள் தங்கள் பணியிடத்திற்குள் அனுமதிக்கப்படுகிறார்கள்.
மேலும், அவர்களுக்கு தினமும் நினைவூட்டும் விதமாக காலையில் வேலைக்கு வந்தவுடன் பாதுகாப்புக்கான ஒரு சிறிய சிற்றுரையும் நடத்தப்படுகிறது. (விமானம் புறப்படும் முன் காண்பிக்கப்படும் பாதுகாப்பு செய்முறை விளக்கம் போல)
அது மட்டுமல்ல, வேலையிடத்தில் மனிதவள அமைச்சின், பாதுகாப்புக் குறித்த பெரிய அளவுகளிலான போஸ்டர்களும், பாதுகாப்பு சுலோகங்களும் ஆங்காங்கே அமைக்கப்படுகின்றன.
பாதுகாப்போடு சுகாதாரம், சுற்றுப்புறம் ( SHE Safety, Health and Environment) இவைகளும் கண்காணிக்கப்படுகின்றன!
தங்கள் வீட்டையும், நாட்டையும் பிரிந்து வந்து இங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு அவர்களது பாதுகாப்பிற்காக இத்தனை நடவடிக்கைகள் எடுக்கப்படுவது மனதிற்கு மிகவும் இதமாக இருக்கிறது.
ஆனால், அவர்கள் வேலையிடங்களுக்கும், தங்குமிடங்களுக்கும் அழைத்துச் செல்லப்படும் முறை மட்டும் மனதை நெருடுவதாகவே இருக்கிறது. ஆம்! திறந்தவெளி வாகனங்களில் வெயிலிலும், பனியிலும், மழையிலும் அவர்கள் உட்கார்ந்துகொண்டு பயணம் செய்வது மிகவும் வேதனையாக இருக்கிறது.
கூடுதல் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்ட சொகுசு கார்களில் பயணிப்பவர்கள் கூட இருக்கைவார் அணிவது போன்ற பாதுகாப்பு செயல் எல்லோருக்கும் கட்டாயமாக்கப்பட்டிருக்கும்போது எந்தவொரு பாதுகாப்புமில்லாமல், ஏன், பிடித்துக்கொள்வதற்குக் கூட ஒரு வசதியில்லாமல், அவர்கள் கால்களை மடக்கி உட்கார்ந்த நிலையில் பயணிக்கும் நிலை பரிதாபமாகவே இருக்கிறது!
இம்மாதிரி பயணங்களினால் எத்தனையோ உயிர்களைப் பலிகொடுத்தும் கூட இந்நிலை தொடர்வதுதான் ஏனோ தெரியவில்லை!
No comments:
Post a Comment