Wednesday, March 10, 2010

கிழக்குக் கடற்கரையோரம் ஓர் நாள்!


சீனப்புத்தாண்டு விடுமுறையின்போது ஒரு நாள் நண்பர்கள் குடும்பத்துடன் கிழக்குக் கடற்கரைக்கு பிக்னிக் சென்றிருந்தோம்! நல்ல அழகான காலைப் பொழுதில் அவரவர் வாகனங்களில் கிளம்பிச் சென்று ஒரு பொதுவான இடத்தில் சந்தித்து நிழல் தேடி அமர்ந்தோம்!
(உண்மையில் நாங்கள் மற்றவர்க‌ளைச் சந்தித்த கதையைச் சொல்லவேண்டுமென்றால் தனி வலைப்பூ ஒன்றே தொடங்க வேண்டும்! கோமளாஸையும், KFC யையும் ஒரே இடத்தில் தேடியலைந்த கதையை தனியாக எழுதவேண்டும்! ஒரு வழியாக எல்லோரும் சந்தித்தபோது எல்லோருக்கும்  பசிக்கவே ஆரம்பித்துவிட்டது!)

ஒரு கைவண்ணத்தில் சமைத்துக் கொண்டுவந்த உணவை பல கைவண்ணத்தில் காலி செய்துவிட்டு, ஓய்வாக அமர்ந்து சீட்டாட ஆரம்பித்தோம்! சீட்டாட்டத்தில் அரிச்சுவடிகூட‌ தெரியாத நான் அதில் ஜாம்பவான்களான நண்பர்களிடம் கேட்டுத்தெரிந்து கொண்டு விளையாடியதோடல்லாமல் அதில் முதல் ஆட்டத்திலேயே வெற்றியும் பெற்று, வெற்றி பெற்றதுகூடத் தெரியாமல் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருந்தது  மறக்கமுடியாத விளையாட்டு!

அதன் பின் நடந்தததுதான் நான் "நடக்குமா, சாத்தியமா?" என்று நினைத்தது!  ஆம்... மாலை நேர சிற்றுண்டிக்காக அங்கேயே பஜ்ஜி, தேநீர் தயார் செய்து சுடச்சுட பரிமாறி உண்ண வேண்டும் என்பது என்னுடைய வெகு நாள் ஆசை!

அதற்குத் தேவையான எல்லாப் பொருட்களையும் தோழியும் நானும் எடுத்துச் சென்றிருந்தோம். "என்ன பஜ்ஜி செய்யப்போகிறீர்களா? இங்கேயுமா?" என்று பல எதிர்ப்புகள் தோன்றிய போதிலும், கொண்டுவந்த ஸ்டவ்வைத் தயங்கித் தயங்கி வெளியே எடுத்து நல்ல இடம் தேடி அதை வைத்து பற்றவைக்க முயன்றபோது...

நல்ல சகுனமாய்,  ஏற்கனவே பற்றிய நெருப்பை அணைப்பதற்காக எங்கிருந்தோ ஒரு தீயணைக்கும் வாகனம் ஒன்று வேகமாக வந்தது. ஆம், பக்கத்து உணவகத்தில் ஏதோ சிறிய அளவில் ஒரு தீ விபத்து! அதற்காகத்தான் அங்கே தீயணைக்கும் வாகனம் வந்திருக்கிறது! அவ்வளவுதான்! இனியெங்கே நாம் பஜ்ஜி போடுவது? எல்லாவற்றையும் எடுத்து மூட்டை கட்டவேண்டியதுதான் என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே அந்த வாகனம் கிளம்பிச்சென்றுவிட்டது.

அதன் பின் மீண்டும் அடுப்பு பற்றவைக்கப்பட்டு மளமளவென வாழைக்காய்,கத்திரிக்காய், குடைமிளகாய் என‌ விதவிதமாய் பஜ்ஜிகளைப் பொரித்தெடுத்து அங்கே விளையாடிக்கொண்டிருந்த நம் சேவாக்குகளுக்கும், டெண்டுல்கர்களுக்கும் பரிமாறி, நாங்களும் உண்டோம். பின் சூடாக மசாலா டீ தாயார் செய்து எல்லோரும் அருந்தினோம்.

ஆஹா, என்ன ஒரு சந்தோசம்! ஒரு உல்லாசத் தளத்தில், இதுபோல் எல்லோரும் சேர்ந்து சமைத்து, (அதுவும் கோமளாஸுக்குப் பக்கத்திலேயே)  சாப்பிடுவதில் எத்தனை மகிழ்ச்சி! மீண்டும் இதுபோன்ற ஒரு சந்தர்ப்பத்தில் 'கூட்டாஞ்சோறு' (அட நம்ம 'பிஸிபேளாபாத்' தான்) செய்து சாப்பிடுவதுதான் என் அடுத்த முயற்சி! ( என் சின்னச் சின்ன‌ ஆசைகளில் ஒன்று!)

அதன் பின் வெகு நாட்களுக்குப் பின் சைக்கிள் ஓட்டிய அனுபவம், மீண்டும் பிள்ளைப் பருவத்திற்குக் கூட்டிச்சென்றது! சாப்பிட்ட பஜ்ஜிகள் ஜீரணமாக நல்ல உடற்பயிற்சியாகவும் அமைந்தது.

பின் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து கோமளாஸில் இரவு உணவருந்திவிட்டு வீடு திரும்ப மனமில்லாமல் மீண்டும் கடற்கரைக்குச் சென்று அமர்ந்தோம்.

அப்போது அங்கு வந்த குட்டி தேவதை ஸ்ருதி, பெரிய அனுபவம் வாய்ந்த தொலைக்காட்சித் தொகுப்பாளினி போல் நடத்திய அந்தாக்சரி... அனைவரையும் அசத்திவிட்டாள்! அவள் போட்டியை நடத்திய விதமும், அணிகளுக்கு புள்ளிகள் வழங்கிய விதமும், கைகால்களை இப்படியும் அப்படியும் ஆட்டி, இடுப்பில் கை வைத்துக் கொண்டு நின்ற காட்சியும் இப்போதும் கண்முன்னே நிற்கின்றன!

இரவு மணி பதினொன்றுக்கு மேல் வீடு திரும்பினோம், மனமில்லாமலேயே!

ஆஹா! மீண்டும் இதுபோன்ற சந்திப்பு எப்போது என  மனம் ஏங்க ஆரம்பித்துவிட்டது!

3 comments:

raadh said...

ஆஹா இதையெல்லாம் தவற விட்டோமே என்று என் மனம் இப்பொழுது துடிக்கிறது. அடுத்த முறை கடற்கரையில் வடை, பஜ்ஜி சுடும்பொழுது சொல்லுங்கள்....

Gomathi said...

Yes, defenitely! Don't miss/escape!

Vikis Kitchen said...

Superb dear. Nice picnic. Love the way you made a snack and tea with friends....nice.