உலகத்தில் உள்ள எல்லோரும் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் தானம் கொடுப்பவராகவோ அல்லது பெறுபவராகவோதான் இருக்கிறோம்! ஒருவரை ஒருவர் சார்ந்து வாழும் வாழ்க்கையில் யார் தானம் கொடுப்பவர், யார் தானம் பெறுபவர் என்பதையெல்லாம் இயற்கை தான் தீர்மானிக்கிறது!
சுனாமி, பூகம்பம் போன்ற இயற்கைப் பேரிடரில் சிக்கியவர்களை வைத்துப் பார்க்கும்போது இது நமக்குப் புலப்படும். பெரிய பெரிய செல்வந்தனும் ஒரே வினாடியில் வீதிக்குவந்துவிடுகிறான்! எனவேதான் யார் தானம் செய்பவர், யார் தானத்தைப் பெறுபவர் என்பதை இயற்கை தீர்மானிக்கிறது என்று சொன்னேன்.
உணவு தானம், உடை தானம், கல்வி(க்கான)தானம், வீடு தானம், பசு தானம், வாகன தானம்,...இன்னும் எத்தனையோ தானங்கள் இருக்கின்றன. ஆனால் இவையெல்லாம் நம்மிடம் தேவைக்கு அதிகமாக இருப்பதிலிருந்து, நம் தேவைக்குப்போக மிச்சமிருப்பதிலிருந்து, எடுத்துக் கொடுப்பது. ஆனால் பெறுபவரின் சூழ்நிலையிலிருந்து பார்க்கும்போது எல்லா தானமும் சிறந்த தானம் தான்.
இவற்றைக் கொடுப்பதினால் கொடுப்பருக்குப் பெரிதாய் இழப்பு எதுவும் ஏற்படப்போவதில்லை! ஆனால் தன்னிலிருந்து தானம் கொடுப்பவர்களின் தானம் ஈடுஇணையற்றது!
ஆம், இரத்ததானம்...எத்தனையோ உயிர்களைக் காப்பாற்றுகிறது. இதில் கொடையாளிக்குச் சில சின்னச் சின்ன உடல் தொந்தரவுகள், அதாவது சோர்வு, மயக்கம், அடுத்த சில நாட்களுக்கு நல்ல உணவு உண்ணவேண்டிய கட்டாயம், போன்றவைகள் இருந்தாலும் அவற்றைப் பொருட்படுத்தாமல் ஓர் உயிரைக் காக்கும் நல்ல எண்ணத்தோடு சிலர் தொடர்ந்து இரத்ததானம் செய்து கொண்டிருக்கிறார்கள்!
எனக்கும் அவ்வாறு இரத்ததானம் செய்யும் எண்ணம் இருந்துவந்தது. அதை நிறைவேற்ற ஒருமுறை தேசிய மருத்துவமனைக்குச் சென்றிருந்தேன். ஆனால் இரத்ததானத்திற்கு முன் செய்யப்பட்ட பரிசோதனையில் எனக்கு இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு கொஞ்சம் குறைவாக இருப்பதாகச் சொல்லி நிராகரிக்கப்பட்டேன்! ஏமாற்றத்துடன் திரும்பிவிட்டேன்.ஆனால் என் கணவருக்கு அந்த பாக்கியம் கிடைத்தது, ஒருமுறையல்ல, பலமுறை!
பின்னர், மீண்டும் ஒரு முறை, என் மகளின் பள்ளி செஞ்சிலுவைச் சங்கத்துடன் சேர்ந்து ஏற்பாடு செய்த இரத்ததான முகாமிற்குச் சென்றேன். இம்முறை இரத்த அழுத்தம் சற்றுக் குறைவாக இருப்பதாகச் சொல்லி நிராகரிக்கப்பட்டேன். எனக்கு மிகவும் பெரிய ஏமாற்றமாகிவிட்டது!
அப்போது தான் இம்மாதிரியான தானங்களுக்கு மனசு மட்டும் இருந்தால் போதாது, உடலும் இடம் கொடுக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டேன்!
ஆனால், அன்று எதிர்பாரா விதமாக வேறொரு நல்ல காரியம் செய்ய முடிந்தது! ஆம்,...'எலும்பு மஜ்ஜை' அதாவது 'Bone Marrow' தானம் செய்ய ஒப்புதல் கொடுத்துவிட்டுவந்திருக்கிறேன். நான் மட்டுமல்ல என் மகளும்!
எப்போது தேவையேற்பட்டாலும் அழைக்கப்படுவோம். இன்னும் நம் வாழ்விற்குப் பிறகும், பிறரை வாழ வைக்கும் அவயங்களையும் தானம் செய்ய விரும்புகிறேன். அதற்கான முயற்சியில் ஈடுபடவிருக்கிறேன். நான் முன்பு கூறியதுபோல் இயற்கையின் முடிவு என்னவோ நாமறியோம். இப்போதைக்கு கொடுக்கும் நம்பிக்கையில் நான்!
கிட்டத்தட்ட ஒரு வருடமாகிவிட்டது, என்றாலும் இதை தம்பட்டம் செய்துகொள்ள ஒருபோதும் நினைத்ததில்லை. இருந்தாலும் ஏன் இப்போது எல்லோரிடமும் பகிர்ந்து கொள்கிறேன் என்றால், இதைப்படிக்கும்போது யாரேனும் ஒருவருக்கேனும் ஓர் உத்வேகம் ஏற்பட்டால், அது நல்லதுதானே என்ற ஒரே எண்ணம்தான்!
பி.கு: நம் இந்தியர்களில் 'எலும்பு மஜ்ஜை' தானம் செய்பவர்கள், மற்ற இனத்தவர்களைவிடக் குறைவாக இருப்பதாகவும், இன்னும் நிறைய தேவை இருப்பதாகவும் புள்ளிவிபரம் சொல்கிறது.
5 comments:
Salutes to you for taking up initiative!I read this quote in a book and want to share it specially with you:)
"The miracle lies in that extraordinary gift of courage and friendship that is given,freely,by a total stranger to save the life of another,somewhere in the world."
Hats off to the kind-hearted souls! May the good deed spread!
Thanks for visiting ,commenting and supporting! Thanks a lot!
வாழ்த்துக்கள். மிகவும் நல்ல பதிவு. நானும் இதை செய்ய நினைக்கிறேன். எலும்பு மஜ்ஜை கிடைக்காமல் மேலும் எங்களுக்கு சொல்லாமலும் / கேட்க்காமலும் என் நெருங்கின உறவினர் மகன் --- ரொம்ப பரிதாபம். இது மிக பெரிய தானம்.
I cant even type some words...pls forgive me. Hats off dear.
வருகைக்கு நன்றி!
உங்கள் வருத்தம் பகிர்ந்து கொள்கிறேன்!
உங்கள் உத்வேகத்திற்கு என் பாராட்டுக்கள்!
Post a Comment