Friday, March 5, 2010

நெஞ்சு பொறுக்குதில்லையே...

மழித்தலும் நீட்டலும் வேண்டாம் உலகம்
பழித்த தொழித்து விடின்

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வள்ளுவன் உரைத்துச் சென்ற, எக்காலத்துக்கும் ஏற்ற‌ பொய்யா மொழி! ஆம்... எவ்வளவு உண்மை!

உலகம் பழிக்கும் செயல்களை விடுத்து, மனிதன் மனிதனாக வாழ்ந்தாலே போதும்! அதை விடுத்து காவியும், தாடியும், கையில் தடியும் கொண்டு பசுவின் தோல் போர்த்திய‌ புலிகளாய் நம்மிடையே வாழ்ந்துகொண்டிருக்கும் (நாம் வாழவைத்துக்கொண்டிருக்கும்) போலிச்சாமியார்கள் ஏராளம்!

அவர்களின் பின்னே வயது, பால், க‌ற்றோர், கல்லார், மொழி, நாடு, இன பேதமின்றி கண்மூடித்தனமாய் சென்று ஏமாந்து நிற்பவர்களை சமீப காலமாய் அதிகமாய் காண்கிறோம்.

ஏன் இந்த அவலம்? இதில் ஏமாறுபவர்களைச் சாடுவதா, ஏமாற்றுபவர்களைச் சாடுவதா? ஏமாறுபவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்களும் இருக்கத்தானே செய்வார்கள்?
எதைக் கண்டு ஏமாறுகிறது இந்தக் கூட்டம்?

சாந்தமான முகம், ஒளி நிறைந்த கண்கள், தீர்க்கமான பார்வை, எளிய உடை, தோற்றம் ,இவற்றோடு கொஞ்சம் சித்துவேலை, இவ‌ற்றையா?

மகான்களைப்போல வேடமிட்டுக்கொண்டு, ஒருவனுக்கு ஒருத்தி எனும் மிகச் சாதாரண மனிதப் பண்புகூட இல்லாத, மனித உருவில் நடமாடும் சாத்தான்கள்!  இந்த சாத்தான்கள் ஓதுவதையும், உப‌தேசிப்ப‌தையும் வேதமெனக் கண்மூடி(த்த‌ன‌மாக) கேட்கும் ஆட்டுமந்தைக‌ளாய் ம‌க்க‌ள் இல்லையில்லை மாக்கள் கூட்ட‌த்தைப் பார்க்கும்போது,

"நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த‌
நிலைகெட்ட‌ மனிதரை நினைத்துவிட்டால்..."

என்ற‌ பார‌தியின் புல‌ம்ப‌ல்தான் நினைவுக்கு வ‌ருகிற‌து!

No comments: