Monday, February 22, 2010

அப்'பா'


திரையரங்கிற்குச் சென்று படம் பார்ப்பது என்பதே அரிதாகிவிட்ட நிலையில் முதன்முறையாக ஒரு ஹிந்தித் திரைப்படத்திற்காகத் திரையரங்கம் சென்றோம்! முதலில், படத்தைப் பார்த்துவிட்டு பரிந்துரைத்த தோழிக்கு நன்றி!

'பா'  இதுவே படத்தின் தலைப்பு!

நிஜ வாழ்க்கையில் தந்தை, மகன்;  திரையில் மகனும் தந்தையுமாக தோன்றியுள்ளனர்.

அதாவது அபிஷேக் பச்சனின் மகனாக அமிதாப் பச்சன்!

அமிதாப் பன்னிரண்டு வயது சிறுவனாகத்(?) தோன்றி நடித்துள்ளார்!

சிறு வயதிலேயே முதுமையாக்கிவிடும்  'PROGERIA'  என்னும் கொடிய நோயினால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுவன் கதாபாத்திரம்.

இந்நோயைப் பற்றி எங்கோ கேள்விப்பட்டிருப்போம், செய்திகளில் படித்திருப்போம். ஆனால் திரையில், அதுவும் வெறும் நடிப்பில் பார்க்கும்போதே மனது மிகவும் வலிக்கிறது.

கடவுளே! இப்படியும் ஒரு வியாதியா?

சரி! கதையைப் பார்ப்போம்.

புதிய சிந்தனைகளோடு அரசியலில் ஈடுபடும் இளைஞனான அபிஷேக்கிற்கும் (அமோல்), மகப்பேறு மருத்துவரான வித்யா பாலனுக்கும் (ம‌ன்னிக்க‌வும், பாத்திர‌ப் பெய‌ர் மறந்துவிட்ட‌து) பிறக்கும் குழந்தைதான் அமிதாப் (ஆரோ). தன் லட்சியத்திற்காக வித்யாவைப் பிரிந்த அமோலுக்கு, தனக்கு ஒரு குழந்தை இருப்பதே பின்னர்தான் தெரியவருகிறது.
த‌ன் தாயின் உத‌வியோடு அமோலை வ‌ள‌ர்த்துவ‌ருகிறார் வித்யா பால‌ன்.
த‌ற்செய‌லாய் ஆரோவைச் சந்திக்கும் அமோல் அவ‌னிட‌ம் ப‌ரிவும் பாசமும் காட்டுகிறார். அமோல்தான் த‌ன் தந்தை என்ப‌தை அறிந்த‌ ஆரோ, இறுதியில் த‌ன் தாயையும், த‌ந்தையையும் சேர்த்துவைக்கிறான்.

அரசியலில் ஈடுபடுவதற்காகவே அயல் நாடு சென்று படித்து பட்டம் பெறும் இளைஞனாக அபிஷேக், மிகவும் நன்றாக நடித்திருக்கிறார்.

அமிதாப்பின் அம்மாவாகத் தோன்றிய வித்யா பாலனும் மிகவும் யதார்த்தமாக, பாத்திரத்தை உணர்ந்து இயல்பாக நடித்துள்ளார்!

கதையின் இன்னொரு முக்கிய கதாபாத்திரம், அமிதாப்பின் பாட்டியாக வருபவர். தன் பேரன் செய்யும் குறும்புகளை ரசிப்பதும், அது எல்லைமீறும்போது மந்திரங்களை முணுமுணுத்துக்கொண்டே சகிப்பதும் நன்றாக இருக்கிறது!

அமிதாப்.....

அப்பப்பா....... ஆள் மட்டுமல்ல நடிப்பிலும் உயர்ந்த மனிதர்தான்!

எண்பது வயது உருவத்தில், பன்னிரண்டு வயது சிறுவனின் நடை, உடை, முகபாவனைகள், கன கச்சிதமாக நடித்திருக்கிறார்!

ஒரு சில (ஒன்றே ஒன்றுதான்) கொச்சை வார்த்தைகளை மீண்டும் மீண்டும் உபயோகிப்பதை தவிர்த்திருக்கலாம்!

இசை நம்ம இளையராஜா! முதல் பாடல் அப்படியே ஒரு பழைய தமிழ்ப் பாடலை நினைவுபடுத்தியது!

மொத்தத்தில் இத்திரைப்படம் ஓரு கவிதை போல் மனதில் நிறைந்துவிட்டது




4 comments:

sudha said...

""பா""-- அப்அப் ""பா "" -- மிக துல்லியமான விமர்சனம் ----------
நெஞ்சை நெகிழ வைத்த ஓர் அற்புதமான திரைப்படம் !

Gomathi said...

வசிஷ்டர் வாயால் ப்ரம்மரிஷி...
மெய்சிலிர்க்கச் செய்தது உம் விமர்சனம்!

வருகைக்கு நன்றி!

raadh said...

'பா' இன்னும் 'பா'ர்க்கவில்லை. ஆனால் இந்த விமர்சனம் கட்டாயம் 'பா'ர்க்கத்தூண்டும். நன்றி

Gomathi said...

நிச்சயம் 'பா'ர்க்கவேண்டிய படங்களுள் ஒன்று 'பா".
தமிழில் நம்'மவர்' கமல் இந்தப் பாத்திரத்தில் கலக்கப்போவதாக, மன்னிக்கவும், நடிக்கப்போவதாகத் தகவல்! காத்திருப்போம்...

வருகைக்கு நன்றி!