Thursday, January 21, 2010

மனதில் உறுதி வேண்டும்!

ஈராயிரத்துப் பத்தின் முதல் நாள் இனிதாகத் தொடங்கியது. காலையில்  எழுந்ததும் ஏகப்பட்ட வேலைகள் காத்திருந்தன. மளமளவென ஒவ்வொன்றாக‌ச் செய்யத் தொட‌ங்கினேன். முத‌ல் நாள் இர‌வு வீட்டில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த‌ விருந்திற்காக‌ வீட்டில் ப‌ல‌ சாமான்க‌ள் இட‌ம் மாறியிருந்தன‌. அவ‌ற்றையெல்லாம் அத‌ன‌த‌ன் இட‌த்திற்கு மாற்றி, பின் வீட்டைக் கூட்டித் துடைத்துக் கொண்டிருந்தேன் த‌னியாளாய்! மற்றவர்கள் (பல்கூட துலக்காமல்) புத்தாண்டு ப்ரொகிராமில் (தொலைக்காட்சியில்) மூழ்கியிருந்தனர்.
ஒவ்வொர் அறையாக‌ முடித்துவிட்டு க‌டைசியாக‌ ச‌மைய‌ல‌றையைத் துடைக்க‌ ஆர‌ம்பித்தேன்.
அப்போது.... எத‌ற்காக‌வோ ச‌மைய‌ல‌றைக்கு வ‌ந்த‌ என் க‌ண‌வ‌ர் க‌வ‌னிக்காம‌ல் த‌ரையில் கால் வைக்க‌ 'ச‌ர்ரென்று' வ‌ழுக்கி, பின் ச‌ட்டென சுதாக‌ரித்து ப‌க்க‌த்திலிருந்த‌ க‌த‌வைப் பிடித்துக் கொண்டார்.(கவனிக்கவும்! கீழே விழ‌வில்லை!) ஆனால் வழுக்கியதால் ஏற்பட்ட அதிர்ச்சி கோபமாக மாறியது. அவர் "ஏன் என்னிடம் நீ தரை ஈரமாக இருக்கிறது என்று எச்சரிக்கவில்லை?" என்று கோபமாகக் கேட்க‌,

நான்: ..........................
அவர்:..........................
நான்: ..........................
அவர்:..........................

அவ்வளவுதான்!!!
 என் புத்தாண்டு தீர்மானம் கீழே விழுந்து நொறுங்கியது! ஆம்... என்னுடைய இவ்வருட புத்தாண்டுத் தீர்மானமே.....
'அன்பானவர்களிடம் கோபம் கொள்ளக் கூடாது'
என்பதுதான்! வழுக்கியது என்னவோ அவர்தான். ஆனால் உடைந்து சிதறியது என் புதிய‌ தீர்மானம்!
இதற்கு முன் எத்தனையோ முறை தீர்மானங்கள் எடுத்து அவற்றை ஒரு சில மாதங்களாவது கடைபிடித்தும் வந்திருக்கிறேன். ஆனால் இம்முறைதான் ஒரே நாளில் என் புத்தாண்டுத் தீர்மானம் சிதைந்து விட்டது.  பரவாயில்லை, நல்லவிசயங்களைக் கடைப்பிடிக்க 365 நாட்கள் காத்திருக்க வேண்டுமா என்ன?  மனமிருந்தால் எந்த நிமிடத்திலும் ஒரு கொள்கைக்காக‌ உறுதி பூணலாம்! மனம்... அதுதான் மிகவும் முக்கியம்! மனதில் உறுதி வேண்டும்!

ஆமா, இவ்வளவு சொல்கிறவள் மறுபடியும் தீர்மானத்தை எடுத்துவிட்டேனா என்றுதானே கேட்கிறீர்கள்? அதுதாங்க இல்ல. எனக்கு அந்த ஒரு நிமிடம் இன்னும் வரல!

4 comments:

sudha said...

Despair not -You can make another resolution , any time of the year -but, don't keep it a secret , so that your family members will support you to resolve to that change !

Will this work out ???

Gomathi said...

கூடுதல் சோதனைகளுக்கு ஆளாக நேரிடும், விஷயம்(தீர்மானம்) வெளியே தெரிந்தால்!
ஹா ஹா!

வருகைக்கு நன்றி!

raadh said...

மூன்று விஷயங்கள் -
1. புத்தாண்டு விருந்திற்கு நன்றி. (விருந்தினர் போட்ட குப்பைகளைச் சரி செய்வதில்தானே எல்லாம் ஆரம்பமானது!)
2. தீர்மானத்தை உடைத்ததென்னவோ தாங்கள், ஆனால் நண்பரல்லவோ வலைப்பதிவில் வம்புக்கிழுக்கப்படுகிறார்!
3. இதற்குத்தான் நான் புத்தாண்டு தீர்மானம் எதுவும் போடுவதில்லை.... ஹீ ஹீ

Gomathi said...

உடன் வந்து காக்கும் தோழர்கள்/ தோழிகள் பலருண்டு என்ற தைரியம் தான் வம்புக்கிழுக்கத் துணிகிறது!

வருகைக்கு நன்றி!