Friday, October 31, 2008

எப்போ வரும் அடுத்த தீபாவளி?

ம்ம்ம்..... தீபாவளி முடிந்து விட்டது. தீபாவளி கொண்டாடுவதற்கு காரணங்கள் பல இருந்தாலும் இம்மாதிரியான பண்டிகைகளின் நோக்கம் ஒன்றே ஒன்றுதான். அதுமகிழ்ச்சி, மகிழ்ச்சி, மகிழ்ச்சி மட்டும்தான்.

ஆம்,
பாமரர்க்கும், பணம் படைத்தவர்க்கும்
ஆடவர்க்கும், பெண்டிருக்கும்,
குமரர்களுக்கும், குமரிகளுக்கும்,
சிறுவர்களுக்கும், சிறுமிகளுக்கும்
எல்லோருக்கும் மகிழ்ச்சி தரக்கூடிய ஒரே பண்டிகை தீபாவளி மட்டும் தான்!



புத்தாடை வாங்குவதும், பார்த்துப் பார்த்து பலகாரங்கள் செய்வதும் விருந்துக்கு தயார் செய்வதும்..... ஒரே பரபரப்புதான்!


இவ்வருட தீபாவளியிலும் இவை எல்லாம் களைகட்டின. நண்பர்களின் வருகையும், பலகாரங்களைப் பரிமாறிக்கொண்ட பாங்கும் மனதிற்கு இன்பம் சேர்த்தன.

பலவீட்டுப் பலகாரங்களும், பல வீட்டுப்பலகாரங்களும் கண்ணையும் கருத்தையும் கவர்ந்தன. "என்னதான் கடைப்பலகாரங்கள் கண்ணைக் கவர்ந்தாலும் சுவையிலும் தரத்திலும் அவற்றைப் பின்னுக்குத் தள்ளியது வீட்டுப்பலகாரங்களே" என்று (பட்டிமன்றம் வைக்காமலே) தீர்ப்பு வழங்கிவிட்டார் நம் 'குக்கரி குயின்'.


சரிதானே? அவரது பாதாம் அல்வா ருசியில் மட்டுமல்ல பரிமாறப்பட்ட விதத்திலும் எல்லோருடைய ஏகோபித்த பாராட்டையும் பெற்றுவிட்டதே!


மேங்கோ தேங்காய் பர்ஃபி மணத்திலும் சுவையிலும் மனதை அள்ளியது என்றால்,மைசூர் பாக் வாயில் போட்டதும் கரைந்து இனித்தது. ஜீரா போளியும் சுவையில் குன்றவில்லை.


பிஸ்தா பர்ஃபி புதுமையென்றால் மாவுருண்டை அருமை. அதை அழகாக உருட்டிய கைகளை கண்டிப்பாக பாராட்டியே தீரவேண்டும்.


குக்கீஸ்...(சொல்லாமல் விடமுடியலீங்க) முதல் முயற்சி என்றாலும் பழுதில்லை, பரவாயில்லை.



பலகாரங்களைப் பற்றி சொல்லும்போது பல காரங்களைப் பற்றிச் சொல்லாம‌ல் விட்டால் எப்படி?


ஒரே (பாபாஸ்) மாவுதான் என்றாலும் வீட்டுக்கு வீடு வித்தியாசம் காட்டிய முறுக்கு, புதுமையான புதினா முள்முறுக்கு, காரம் நிறைந்த காராசேவு, உள்ளளவும் நினைக்கச் செய்யும் ஓட்டுப்பக்கோடா(?)....அப்பப்பா.... என் போன்ற காரப் பிரியர்களுக்கும் வகை வகையான காரங்கள் நிறையவே இருந்தன!



எல்லாவற்றுக்கும் மேலாக தீபாவளியன்று மாலை சிறுவர்களோடு (சிறுவர்களாக) ஆண்களும் பெண்களும்(?) பட்டாசு கொளுத்தி மகிழ்ந்ததும் மகிழ்ச்சியான அனுபவம். அதன் பின் உண்ட இரவு உணவும் ஓர் வித்தியாசமான விருந்துதான்!


ஓ..... இவை எல்லாம் மீண்டும் நிகழ இன்னும் ஓராண்டு காத்திருக்க வேண்டுமே....

3 comments:

Nivedha G said...

That is Praghalad right?! Nice photo and of course a good post...

raadh said...

Yes, I agree. That's a good photo!

Gomathi said...

Thanks. Credit goes to Praveen.