Thursday, October 23, 2008

எப்போது வரும் அந்த தீபாவளி?

தீபாவளி நெருங்கிவிட்டது. துணிமணிகள் எல்லாம் எடுத்தாச்சா? பல வீடுகளில் பெண்மணிகளுக்கு மட்டுமே துணிமணிகள் வாங்கியிருப்பதாகக் கேள்வி. (இங்கும் நிலைமை அப்படித்தான்) என்ன செய்வது? ஆண்களுக்கு ஆடை அமைவதற்கும் ஆண்டவன்தான் வரம் கொடுக்கவேண்டும் போலிருக்கிறது! (அனுபவம் பேசுகிறது)


பலகார வேலைகள் எல்லாம் படுவேகமாய் போய்க்கொண்டிருக்கும் என்று நினைக்கிறேன். நானும் பட்சணங்கள் செய்ய ஆரம்பித்துவிட்டேன். குக்கீஸ்.... இந்த வருட சிறப்பு பதார்த்தம். உற்ற தோழி சுகந்தி கற்றுக் கொடுத்ததை தனியாளாய் நின்று (பரீட்சைக்காரர்களுக்கு பங்கம் விளைவிக்காமல்தான்) செய்துபார்த்துவிடுவது என்று (சமையற்)களம் புகுந்து விட்டேன்.


அதற்குத் தேவையான மாவை எடுத்து பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக செய்துகொண்டிருக்கும் போது தீபாவளியைப் பற்றியச் சிந்தனைகளும் கேள்விகளும் மனதில் எழுந்தன.


நாம் ஏன் தீபாவளி கொண்டாடுகிறோம்? அனைவருக்கும் தெரிந்த விசயம் தான். என் கேள்வி அதுவல்ல. ஏதோ ஒரு காலகட்டத்தில் வாழ்ந்த ஒரு அசுரனின் அசுரப் பிடியிலிருந்து விடுபட்ட மக்கள் அவன் அழிந்த நாளைத் தீபாவளித் திருநாளாகக் கொண்டாடி வந்துள்ள‌னர்.ஆனால் நாம் ஏன் இன்றும் அதைக் கொண்டாடி வருகிறோம்?


அன்றாவது ஒரு நரகாசுரன்தான் இருந்தான். இன்று நம்மைச் சுற்றி எத்தனை நரகாசுரர்கள்? ஆம். பசி, பஞ்சம்,பிணி,கொலை,கொள்ளை,பலாத்காரம்,ஊழல், ந‌யவஞ்சகம்,கலப்படம்,தீவிரவாதம்,இனப்படுகொலை,சமயச்சச்சரவுகள்.....
இன்னும் எத்தனை எத்தனையோ நரகாசுரர்கள் மத்தியில் அல்லவா வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? இந்த அசுரர்களை அழிக்க பகவான் எப்போது அவதரிக்கப்போகிறார்?


கமலின் தசாவதாரம் ஒருவழியாக வந்துவிட்டது. வரப்போவதாகப் புராணங்கள் சொல்லும் அந்த தசாவதாரம் (கல்கி அவதாரம்) எப்போது வரும்? கொஞ்சம் சீக்கிரம் வந்தால் நாமும் ஓர் அர்த்தமுள்ள தீபாவளியைக் கொண்டாடலாமே! அதுவும் இந்தப் பிறவியிலேயே!


எது எப்ப‌டியோ? இப்போதைக்கு என் குக்கீஸ் குக்காகி விட்ட‌து. அடுத்து செய்ய‌ வேண்டிய‌வை நிறைய‌ இருக்கிற‌து. என‌வே என் சிந்த‌னைக் க‌வ‌ச‌த்தைக் க‌ழ‌ற்றி வைத்துவிட்டு உங்க‌ள் எல்லோருக்கும் என் ம‌ன‌மார்ந்த தீபாவ‌ளி ந‌ல்வாழ்த்துக்க‌ளைக் கூறிக்கொள்கிறேன்!


தீப‌ங்க‌ளின் ஆவ‌ளியில் இல்ல‌ங்க‌ளைப் போல‌ உங்க‌ள் உள்ள‌ங்க‌ளும் பிர‌காசிக்க‌ட்டும்!

2 comments:

raadh said...

நல்ல கருத்துக்கள்! அர்த்தமுள்ள தீபாவளியைக் கொண்டாட எல்லோரும் முயல்வோம்! அனைவருக்கும் எங்கள் தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

Nivedha G said...

Enadhu eeniya deepavali vazhathukal!