Tuesday, September 30, 2008

சிறுவ‌ர் தின‌ வாழ்த்துக்க‌ள்!

சிறுவ‌ர் தின‌த்தில் சிறுவ‌ர்க‌ளைப் ப‌ற்றி நினைக்கையில் என் ம‌ன‌தில் தோன்றிய‌வை...

ஓடிவிளையாடு பாப்பா நீ
ஓய்ந்திருக்கலாகாது பாப்பா

பாரதி பாடிவிட்டுச் சென்ற பாப்பா பாட்டு. இது அக்கால குழந்தைகளுக்கு எழுதப்பட்டதாகத் தெரியவில்லை. ஏனென்றால் அக்காலத்தில் எல்லாம் குழந்தைகள் சொல்லாமலேயே ஓடி விளையாடினார்கள். ஆனால் இக்கால குழந்தைகளுக்குத்தான் விளையாடுவதற்குக்கூட (ஓடியாடி) சொல்லவேண்டியிருக்கிறது. எனவேதான் பாரதி பாடிய இப்பாடல் இக்காலக் குழந்தைகளுக்கே பொருத்தமாகத் தோன்றுகிறது.
பார‌தி ப‌ழைய‌ கால‌த்து ஆள். அவ‌னுக்குத் தெரியுமா இக்கால பிள்ளைக‌ளின் பாட‌ச்சுமை? என்று நாம் ந‌ம் பிள்ளைக‌ளுக்காக‌ ப‌ரிந்து பேச‌லாம். ஆனால் உண்மையைச் சொல்ல‌வேண்டும் என்றால் அவ‌ர்க‌ளுக்கு விளையாட நேர‌மே இல்லையா என்ன‌?

மாலைமுழுதும் விளையாட்டு என்று
வ‌ழ‌க்க‌ப்ப‌டுத்திக்கொள்ளு பாப்பா

என்று விளையாட்டுக்கென்று ஒரு நேரத்தையும் வ‌குத்துத் த‌ந்துவிட்டுச் சென்றிருக்கிறான் பாரதி.அவ‌ன் வ‌குத்துத் த‌ந்த‌ நேர‌ம் வேண்டுமானால் அனைவ‌ருக்கும் ஒத்துவராததாக இருக்கலாம். அவரவர் பள்ளி நேரம், வீட்டுப்பாடம் ஆகியவற்றைப்பொறுத்து ஏதேனும் ஒரு நேரத்தை தேர்ந்தெடுத்து விளையாடலாம். அது அவர்களுக்கு நல்ல உடற்பயிற்சியாக அமைவதோடு நல்ல பசி, அதனால் ஏற்படும் நல்ல உண்ணும் பழக்கம், அதனால் நல்ல உடல் வலிமை, ஆரோக்கியம் ஆகியவற்றையும் கொடுக்கிறது. அதோடு விளையாட்டு நல்ல போட்டி மனப்பான்மையையும் விட்டுக்கொடுக்கும் பண்பையும் கற்றுக் கொடுக்கிறது. இன்னும் எவ்வளவோ நன்மைகள் விளையாட்டால் விளையாட்டாகக் கிடைக்கிறது.ஆனால் நம் பிள்ளைகள் செய்வது என்ன?
ஓடியாடி விளையாடும் பிள்ளைப் பருவத்திலேயே கணினியும், வீடியோ விளையாட்டுகளும் அவர்களை ஆக்கிரமித்திருக்கின்றன. போதாக்குறைக்கு தொலைக்காட்சி வேறு அவர்களை க‌ட்டிப்போட்டுவிட்ட‌து. விளைவு ப‌த்து வ‌ய‌தை எட்டுமுன் மூக்குக் க‌ண்ணாடியும், ப‌தின்ம‌ வ‌ய‌திலேயே உட‌ற்ப‌ரும‌ன் பிர‌ச்சினைக‌ளும்.
அது மட்டுல்ல வீடியோ விளையாட்டுகளினால் சிறுவர்களுக்கு இருதயத்துடிப்பு அதிகமாகிறதாம். நான் சொல்லவில்லை.ஹாங்காங் பல்கலைக்கழக மனித நடவடிக்கைகள் ஆராய்ச்சி மைய பேராசிரியர்கள் ராபின் மலேக்கர், அலிசான் மெக்மனஸ் ஆகியோர் இது தொடர்பான ஆய்வை மேற்கொண்டனர்.
அவர்கள் வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் கூறியிருப்பதாவது: வீடியோ கேம் விளையாடும் குழந்தைகளின் உடல்நிலை பலவகையில் பாதிக்கப்படுகிறது. ஆறு முதல் 12 வயது வரை உள்ள குழந்தைகள் வீடியோ கேம் விளையாடும் போது, அவர்கள் இதயத்துடிப்பு அதிகரிக்கிறது; அவர்களின் உடலில் கலோரி வெப்ப சக்தி, வழக்கத்துக்கு மாறாக நான்கு மடங்கு குறைகிறது. ஐந்து நிமிட நேரம் வீடியோ கேம் விளையாடினாலே இந்த பாதிப்பு ஏற்படுகிறது. 1 நிமிடத்துக்கு 39 சதவீத கலோரி எரிக்கப்படுகிறது என்பது எங்கள் ஆய்வில் தெரியவந்துள்ளது.
மற்ற விளையாட்டுக்களில் குழந்தைகளுக்கு பாதிப்பும் இல்லை; அதே நிலையில் அவர்களின் உடல் ஆரோக்கியத்துக்கும் உதவுகின்றன. மற்ற விளையாட்டுக்களில் குழந்தைகளின் கலோரி எரிப்பு வெறும் 0.6 சதவீதம் தான். குழந்தைப்பருவத்தில் உடல் வளர்ச்சிக்கு உடலில் கலோரி சத்து அதிகமாக தேவை. கிரிக்கெட், கால்பந்து, டென்னிஸ் போன்ற விளையாட்டுக்களில் கலோரி மிக குறைவாகவே இழப்பு ஏற்படுகிறது. வீடியோ கேம் விளையாடும் போது, பதட்டம் அதிகரிக்கிறது; மன அழுத்தம் அதிகமாகிறது. இதனால் குழந்தைகளின் இதயத் துடிப்பும் இரண்டு மடங்குக்கு மேல் அதிகமாகிறது.

இவ்வாறு ஆய்வில் தெரியவந்துள்ளது.எனவே பெற்றோர்களே பிள்ளைகளை வீடியோ விளையாட்டு மாயைகளிலிருந்து விடுவித்து ஓடியாடி விளையாட உற்சாகப்படுத்துங்கள்.
ஐந்தில் வ‌ளையாதது ஐம்பதில் வளையுமா?

No comments: