Sunday, September 14, 2008

வணக்கம்! ஒரு சிறிய இடைவெளிக்குப்பின் மீண்டும் சந்திக்கின்றேன்.
சில நாட்களுக்கு முன் ஒர் இரவு உணவு வேளையின்போது ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அழைத்தது ஒரு சீனப்பெண்(ணாகத்தான் இருக்கவேண்டும்). எடுத்தவுடனேயே வீட்டு உரிமையாளர் பெயர், முகவரி போன்ற விபரங்களைக் கூறி சரிதானா என்று கேட்டாள். நானும் ஏதோ ஒரு விரைவுத் தபால் சேவை நிறுவனத்திலிருந்து அழைக்கிறார்கள் போலும் என்று யூகித்துக்கொண்டே அவள் கேட்ட விபரங்களை சரிசெய்தேன். பிறகு அவள் கேட்டதுதான் என்னை மிகவும் அதிர்ச்சியடையச் செய்தது.
வேறொன்றுமில்லை. அவள் ஒரு வீட்டு முகவர். அவளிடம் அவசரமாக வீடு தேவையுள்ள,அதிக விலைகொடுக்க தயாராகவுள்ள ஒரு வாங்குபவர் (urgent buyer) இருப்பதாகவும், அதுவும் எங்கள் புளோக்கிலேயே தேவைப்படுவதாகவும் கூறி உங்கள் வீட்டை விற்கிறீர்களா என்று கேட்டாள்.
நான் மிகுந்த அதிர்ச்சியுடன், "வீட்டை விற்பதா? விற்றுவிட்டு...?" என்று கேட்டேன்.அதற்கு அவள், " நாங்கள் நல்ல விலையில் வேறு வீடு பார்த்து தருகிறோம்" என்று மிகவும் சாதாரணமாக பதிலளித்தாள். "அதை உன்னிடம் வேண்டும் என்று கேட்பவர்க்கு வாங்கிக்கொடுக்க வேண்டியதுதானே? உன்னிடம் விற்கவேண்டும் என்று வருபவர்களிடமிருந்து வாங்கிக்கொடு. அதைவிட்டுவிட்டு குடியிருந்துகொண்டிருப்பவர்களிடம் போய் ஏன் வீட்டை விற்கிறாயா என்று கேட்கிறாய்?" என்று கேட்டேன். உடனே தொடர்பைத் துண்டித்துவிட்டாள்.
இப்போதெல்லாம் இதுபோன்ற அழைப்புகள் வருவது சகஜமாகிவிட்டது என்றாலும் அவள் கேட்ட விதம் என்னை கொஞ்சம் எரிச்சலூட்டியது எனலாம்.
என்னதான் வியாபரம், மார்க்கெட்டிங் என்றெல்லாம் சொன்னாலும் குடியிருந்துகொண்டிருக்கும் வீட்டைக்கேட்பது எந்த ஊர் கலாச்சாரம் என்று தெரியவில்லை. நம்மூர் என்றால் நடப்பதே வேறு.
இதுபோல் நான்கைந்து அழைப்புகள் வந்தால் நமக்கும் நாளடைவில் பழகிவிடும். ஆனால் என்னுடைய பயம் என்னவென்றால் இப்போதைய காலகட்டத்தில் கிட்டத்தட்ட எல்லா துறைகளிலுமே இடைத்தரகர்கள் வந்துவிட்டார்கள். மாட்டுச்சந்தையிலிருந்து மருத்துவத்துறை வரை தரகர்கள் இருக்கிறார்கள். இப்படியே போனால் "உங்கள் சிறுநீரகங்களில் ஒன்றை விற்கிறீர்களா? நல்லவிலை கொடுக்கும் ஆட்கள் எங்களிடம் இருக்கிறார்கள்" என்று கேட்கும் நாள் தொலைவில் இல்லை என்று தோன்றுகிறது. நடக்கும், நடக்கும்... கலிகாலம் அல்லவா?

No comments: