Friday, April 16, 2010

சரி நிகர் சமானமாய்...

தலைப்பைப் பார்த்ததும் இது ஏதோ விவகாரமான விசயமோ என நினைக்கவேண்டாம்!  நான் நம் வீடுகளில் அன்றாடம் காணும் நிகழ்ச்சியில் இருந்து என் மனதில் தோன்றியவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

சாதாரணமாக ஓர் ஆண்குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் உள்ள வீடுகளில் நாம் பார்க்கும் ஒரு மிகச் சாதாரண விசயம் தான்! ஆம், ஒரு தாய் தனக்கு வீட்டு வேலைகளில் ஏதேனும் உதவி தேவைப்பட்டால், சட்டெனத் தன் பெண்பிள்ளையை உதவிக்கு அழைப்பார். அவளுக்கு என்னதான் பாடச்சுமை இருந்தாலும், 'ஒரு ஐந்து நிமிடம் இங்கே வந்து விட்டுப் போ' என்று கட்டளையிடும் தாய்மார்கள் அதிகம். (என்னைப் போல‌)

அதே சமயம் வீட்டிலுள்ள ஆண் பிள்ளைகள் சும்மா இருந்தால் கூட அந்த தாய் ஆண்பிள்ளையை தனக்கு உதவ அழைப்பதில்லை! காரணம், ஆண் பிள்ளைகள், வீட்டுவேலைகள் அதாவது பாத்திரம் துலக்குவது,துணி உலர்த்துவது, வீட்டைப் பெருக்குவது போன்ற சிறு வேலைகளைச் செய்வது என்பது அந்தத் தாய் பார்த்தறியாத விசயம். ஆம்! அவள் தன் வீட்டில் வளர்ந்த விதமும் அதுதானே?

ஆனால் பெண்பிள்ளைகள், அக்காலம் போல் அல்லாமல், ஆண்பிள்ளைகளைப் போலவே, ஏட்டுக்கல்வி மட்டுமல்லாது  மிதிவண்டி ஓட்டுதல், இரு சக்கர மோட்டார் வாகனங்கள் ஓட்டுதல், நீச்சல், தற்காப்புக் கலைகள், காரோட்டுதல், இன்னும் என்னன்னவோ ஏன் விமானம் ஓட்டக்கூடக் க‌ற்றுக்கொடுக்க‌ப் ப‌டுகிறார்க‌ள் !

ஆனால் ஆண்பிள்ளைகளுக்கு மட்டும் ஏன் சாதாரண எளிய‌ வீட்டுவேலைகளைகூடக் கற்றுக்கொடுக்கவும், அவர்களை செய்யச்சொல்லவும் தயங்குகிறோம்?

காலம் மாறிவிட்ட‌து!  நாமும் ந‌ம் எண்ண‌ங்க‌ளைக் கொஞ்ச‌ம் மாற்றிக்கொள்ள‌த்தான் வேண்டும்! ஏன் என்றால் நாம் இப்போது வாழும் அவசர வாழ்க்கைமுறையில், தாய்மாருக்கு வீட்டுவேலைக‌ளில் ஓர் உத‌விக்க‌ர‌ம் தேவைப்ப‌டுகிற‌து. மேலும், அவ‌ர்க‌ளுக்கு வ‌ய‌தாக‌ ஆக‌ உட‌ல்சோர்வு கார‌ண‌மாக‌ 'யாராவ‌து இதைச் செய்து த‌ர‌மாட்டார்க‌ளா' என்று ம‌ன‌ம் ஏங்கினாலும் ஆண்பிள்ளையைப்போய் எப்ப‌டி இதை செய்ய‌ச் சொல்வ‌து எனத் த‌ய‌ங்கி, த‌ன் உடல் நிலையையும் பொருட்ப‌டுத்தாது, உட‌ல்வ‌லியோடு வேலைசெய்யும் தாய்மார்க‌ள் அதிக‌ம்! (ஆண் பிள்ளைக‌ள் ம‌ட்டுமே கொண்ட‌ வீடுக‌ளில்)

ஆண்க‌ளும், த‌ங்க‌ள் ம‌னைவிக்கு உத‌வ‌ ம‌ன‌மிருந்தாலும், தாங்க‌ள் வ‌ளர்ந்த‌ முறை கார‌ண‌மாக‌, ப‌ல‌ர் அறிய‌ வீட்டுவேலைக‌ளைச் செய்ய‌த் த‌ய‌ங்குகின்ற‌ன‌ர். அந்த‌ நிலை ந‌ம் பிள்ளைக‌ளுக்கு வ‌ர‌க்கூடாது என்றால், நாம் இப்போதே அவ‌ர்க‌ளைத் த‌யார் செய்ய‌ வேண்டும்!

ஆம்! இனிவ‌ரும்  தலைமுறையில் முற்றிலும்  பெண்க‌ள் வீட்டை ம‌ட்டும் க‌வ‌னித்துக் கொண்டு, வீட்டிலேயே இருப்ப‌து எல்லாம் அரிதாகிவிடும். அந்நிலையில், ஆணும் பெண்ணும் சரிநிக‌ர் ச‌மான‌மாய் வீட்டு வேலைக‌ளையும் பகிர்ந்து கொள்வது  அவ‌சிய‌மாகும்!  அதுவே நிச்ச‌ய‌மாக‌ அவர்களது குடும்ப‌த்தில் ந‌ல்ல சூழ்நிலையை ஏற்ப‌டுத்தும்!

No comments: