Thursday, March 5, 2009

நாமும் அமிதாப் ஆகலாம்(?)

நான் படித்த ஒரு சிறிய கட்டுரையை ஆதாரமாய் வைத்து என் மனதில் தோன்றியவைகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள நினைக்கிறேன்.

திரைப்படத்துறையினரை முன்னுதாரணமாகச் சொன்னால் பலருக்குக் கோப‌ம் வ‌ரும். எல்லா மனிதர்களும் செய்திகளின் தூதுவர்களே. எவரோ ஒரு முகமறியா மனிதரை முன்னுதாரணமாகக் காட்டுவதைவிட ஒரு நாடறிந்த மனிதரை உதாரணமாகச் சொல்வதில் தவறில்லை.
சில ஆண்டுகளுக்கு முன் காதில் விழுந்த செய்தி இது.
அமிதாப் பச்சன் பெருங்கடனாளியாகிவிட்டார். திவாலாகிவிட்டார். மஞ்சள் நோட்டீஸ் கொடுக்கப்போகிறார் என்றெல்லாம் சொன்னார்கள்.
அவரது நிறுவனங்கள் திணர ஆரம்பித்தது. ஒரு பக்கம் கடன் தொல்லை மறுபக்கம் வரி பாக்கி நெருக்கடிகள். படங்களும் இல்லை. உடல் நலமும் நலிய ஆரம்பித்தது.
இந்த சமயம்தான் "கோன் பனேகா குரோர்பதி"யில் தலைகாட்டினார். நிகழ்ச்சியை நாடே பாராட்டும்படி மிகச்சிறப்பாக நடத்தினார். நல்ல விளம்பர வாய்ப்புகளும் தேடி வந்தன. மிட்டாய்களுக்கும் ஆயின்மென்ட்டுகளுக்கும் விளம்பரம் செய்தார்.ஒரு சில படவாய்ப்புகளும் வர ஆரம்பித்தன.வந்த படங்களும் நன்றாய் அமைந்தன. மகன் அபிஷேக்கும் தலையெடுத்தார். ஐஸ்வர்யம் சேர்க்க ஐஸ்வர்யாராயும் மருமகளாய் வந்தார்.
இன்று அமிதாப்புக்கு எவ்வளவோ தேறும் என்கிறார்கள். திரை நாயகர்கள் விழுந்த வரலாறுகள் ஆயிரம். ஆனால் எழுந்த வரலாறு ஒன்றுதான். அந்த வரலாற்றுக்குச் சொந்தக்காரர் அமிதாப் ஒருவர்தான்.
வாழ்வில் வீழ்ந்த பலர் அவ்வளவுதான் முடிந்தது நம் கதை; தீர்ந்தது நம் வாழ்க்கை; என்கிற முடிவுக்கு வந்துவிடுவார்கள். பணம் தேடுவதற்குப் பதிலாக தாடி மீசைக்கு மாறி ஓடாய் தேய்ந்து அனுதாபத்தைத் தேடியலைவார்கள். ஆற்றில் எதிர் நீச்சல் போடுவதை நிறுத்தினால் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டுவிடுவோம் என்பதை உணர்ந்து செயல்பட்டவர்கள் வாழ்க்கையில் எந்தப் பிரச்சினைகளையும் சமாளித்து வெற்றிந‌டை போடுவார்கள்.
கதவுகள் மூடப்பட்டால் என்ன? சாளரங்கள் கூடவா இல்லாமல் போய்விடும்?

1 comment:

Nivedha G said...

"When you get to the darkness,see in your mind what you saw in the light and keep moving to the goal.Soon the goal that you pictured in your mind will materialize before you."

This is one of my favourite quotes.I was reminded of this quote when I read your post.

Thanks for the motivating post!