தலைவலியே தலைவிதியாய்...
தலைவலி போதுமா கிருபா உன்
தலையெழுத்தை மாற்றுவதற்கு? ஒரு
தலைவலியா உன்னை
நிலைகுலையச் செய்தது?
நிலைகுலைந்தது
நீ யென்றால்
நிலைதடுமாறியது
நாங்களன்றோ?
கரம் பிடித்த கணவனும்
கருத் தாங்கிய பிள்ளைகளும்
செய்வதறியாது நிற்கின்றனரே
சுழலில் பட்ட தோணிகளாய்!
மனைவியாய் வந்தவள் நல்ல
துணைவியாய் இருப்பவள் உறு
துணையாயிருப்பாள் என நம்பியவன்
அனலில் இட்ட புழுவானானே!
சொல்லாமல் போனாலும் நீ
போன இடம் புரிந்திருக்கும் உன்
பெரிய மகள் மயூரிக்கு!
சொன்னாலும் புரியாது
என்ன சொல்லி புரியவைக்க அறியாத
சின்ன மகள் ரோஷிணிக்கு?
பெரிதாய் பழக்கமில்லை
பார்க்கும் போதும்
பெரிதாய் பேசவில்லை
அவ்வளவே நம் பழக்கம்!
சாமானியமாய் நான் நினைத்தேன் நீ
சாதித்தவற்றை கேட்கும் வரை
சாதனைப் பெண்தான் நீ!
குறுகிய காலத்தில் பல
அரிய செயல் செய்தாய் உன்
வேகமான முன்னேற்றத்திற்கு
விலை அதிகம் கொடுத்தது ஏன்?
பட்டங்கள் பல பெற்றாய் செயல்
திட்டங்களில் வெற்றி கண்டாய்
நாட்டியமும் பயின்றவளாம்
கேட்டிருக்கிறேன் உன் அத்தை சொல்லி!
பாலர் பள்ளியில் பணிதொடங்கி இன்று
கல்லூரி விரிவுரையாளரானாய்!
கல்லூரியில் காலூன்றி
காலம் ரொம்ப ஆகலையே?
முனைவர் பட்டம் பெற்றிடவே
முனைந்திருக்கும் வேளையிலே
முயற்சியது கூடுமுன்னே
முடிவதுவும் முந்தியதேன்?
தலைமகளானாய் பெற்றோர்க்கு
மாதாவானாய் இரு மகள்களுக்கு
குருவானாய் பல மாணவர்களுக்கு
தெய்வமனாய் இன்று எல்லோர்க்கும்.
தெய்வமாய் நீயிருந்து
என்றென்றும் வழிகாட்டு
உன்னுடையோர் வாழட்டும்
உனக்கமைதி கிடைக்கட்டும்!
2 comments:
Oh my goodness! I never knew that u could write so well! I am so proud of u aunty! I really enjoyed reading it and the poem was really touching...
இந்த அற்புதமான கவிதையை படித்த பின் என் மனதில் நிலைத்து நின்றது என்னவோ
சோகம் ஒன்று தான் !!!!
Post a Comment