கைதிகளிடமிருந்து உண்மையை வரவழைக்க காவல்துறையினர் பல வகையிலும் முயற்சி செய்து பயனளிக்காதபோது கடைசி முயற்சியாக ஒரு யுத்தியை கையாள்வர். அது தான் மின்னதிர்ச்சி மற்றும் மயக்க நிலையில் கேள்விகள் கேட்பது.
அன்னியன் திரைப்படத்தில் அம்பியிடமிருந்து உண்மையை வரவைப்பார்களே நினைவிருக்கிறதா? அச்சோதனையை எப்படி எதன் அடிப்படையில் செய்கிறார்கள் தெரியுமா? அந்த சோதனைகளின் பெயர்பாலிகிராஃப் நார்கோ சோதனை.
சமீபத்தில் இந்தியாவில் நடந்த நொய்டா இரட்டைக் கொலை வழக்கில் பல் வைத்தியர் ராஜேஷ் தல்வாரின் கம்பவுண்டர் கிருஷ்ணா பாலிகிராப் சோதனைக்கும், நார்கோ சோதனைக்கும் உட்படுத்தப்பட்டார்.
பாலிகிராப் சோதனை: பாலிகிராப் என்பது ஒரு கருவி. இதயத் துடிப்பு. ரத்த அழுத்தம். வியர்வைப் பெருக்கம் போன்றவற்றை இது பதிவு செய்து கொள்கிறது.
காவல் துறையினர் ஒருவர் பொய் சொல்கிறாரா என்பதை கண்டு பிடிப்பதற்காக இந்த கருவியை பயன்படுத்துகிறார்கள். ஒருவர் பொய் சொல்லும்போது அவர் பரபரப்பு அடைவது இயற்கை. பொய் சொல்லும்போது இதயத் துடிப்பு அதிகரிக்கிறது, இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. அவர் மூச்சு விடும் தன்மை மாறுபடுகிறது. வியர்வை அதிகரிக்கிறது. அவரிடம் கேள்வி கேட்கும்போது, விசாரணை செய்பவருக்கு ஏற்கனவே பதில் தெரிந்த கேள்விகளை கேட்கிறார். அப்போது இந்த கருவியில் பதிவாகும் விவரங்களுக்கும், பதில் தெரியாத கேள்விகளை கேட்கும்போது பதிவாகும் விவரங்களுக்கும் இடையே மாறுபாடு இருந்தால், அவர் பொய் சொல்கிறார் என்பது உறுதியாகிவிடும்.
நார்கோ சோதனை: பொய் சொல்லவேண்டும் என்றால் ஒருவர் தமது கற்பனைத் திறனை பயன்படுத்தவேண்டும். நார்கோ சோதனையில், சோதனை செய்யப்படுபவர் பாதி நினைவு கொண்டவராக்கப்படுகிறார். இந்த நிலையில் பொய் சொல்வதுக் கடினம். தமக்கு நன்கு தெரிந்த விவரங்களை மட்டுமே அவர் சொல்ல முடியும். இந்த சோதனையின்போது சோடியம் பென்டாத்தால் அல்லது சோடியம் அமிட்டால் ரசாயனப் பொருளை ஊசி மூலம் செலுத்துகிறார்கள்.
அந்த நபர் ஆணா, பெண்ணா, அவரது வயது, உடல் நிலை ஆகியவற்றின் அடிப்படையில் எந்த அளவுக்கு செலுத்துவது என்பதை நிர்ணயிக்கிறார்கள். அளவுக்கு மீறி செலுத்தினால் அவர் கோமா எனும் நினைவிழந்த நிலைக்குத் தள்ளப்படுகிறார்., அல்லது சில சந்தர்ப்பங்களில் மரணம்கூட நேர்வதுண்டு.
இந்த ரசாயனப் பொருட்களை செலுத்திவிட்டால், அவர் தாமாக எதுவும் சொல்லும் நிலையில் இருக்க மாட்டார். எளிய கேள்விகளாக இருந்தால் பதில் சொல்வார். பாதி நினைவு கொண்ட ஒருவர், பதில்களை திரித்துக்கூற முடியாது என்பதன் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்படுகிறது.
No comments:
Post a Comment